Published : 03 Jul 2019 12:00 AM
Last Updated : 03 Jul 2019 12:00 AM

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் முற்கால பாண்டியர்கள் உருவாக்கிய வெட்டுவான் கோயில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலையை குடைந்து அமைக்கப்பட்ட இக்குடவரை கோயில் முற்கால பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதேகாலத்தில் உருவான, கழுகுமலையின் மீதுள்ள சமணப் பள்ளியும், வெட்டுவான் கோயிலும் புகழ்பெற்றவை.

மரபுச் சின்னம்எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில் போன்று, பெரிய மலைப்பாறையை 7.50 மீட்டர் ஆழத்துக்கு சதுரமாக வெட்டி, அதன் நடுப்பகுதி கோயிலாக செதுக்கப்பட்டுள்ளது. இதை வெட்டுவான் கோயில் என அழைக்கின்றனர். இக்கோயிலை வெளிநாட்டினர் ஏராளமானோர் பார்வையிட்டுச் செல்கின்றனர். இந்த மலை தமிழக அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

தமிழக அரசும், மத்திய அரசும் கழுகுமலையை உலக பாரம்பரிய சின்னமாக மாற்ற முயற்சி எடுக்க வேண்டும். உலகபாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் இக்கோயில் அறிவிக்கப்பட்டால், போதிய நிதி உதவி கிடைக்கும். ஏராளமானோர் ஆராய்ச்சி மேற்கொள்ள வருவார்கள். சுற்றுலா இங்கு வளர்ச்சிபெறும். வேலைவாய்ப்பும் பெரு கும் என்று வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

சிற்ப வேலைப்பாடுராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது:சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கழுகுமலை வெட்டுவான்கோயில் ஒற்றைக் கற்கோயிலாகும்‍‌. கருவறையும், அர்த்தமண்டபமும் உள்ளன. பணி நிறைவுபெறாமல் உள்ளது.

விமானத்தின் முதல் தளத்தில் தட்சிணாமூர்த்தி, திருமால், விசாபகரணர், அக்கமாலையை கையில் ஏந்தி சன்னவீரம் தரித்த முருகன், சந்திரன், சூரியன் சிற்பங்கள் உள்ளன. கிரீடத்தில் உமா மகேஸ்வரர், மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி, நரசிம்மர், பிரம்மா உள்ளனர். மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி சிலை இங்கு மட்டுமே உள்ளது.

சிற்பங்கள் அனைத்தும் புன்னகை தவழும் முகத்துடன் காட்சியளிக்கின்றன. திராவிட வகை விமானத்துக்கு மிகப்பெரியநாசிக்கூடுகளும், மகரதோரணங்களும் அழகு சேர்க்கின்றன. கற்றளிக் கோயில்கள் கீழிருந்து திட்டமிட்டு கட்டி மேல் எழுப்பப்படுபவை. ஆனால் இந்த ஒற்றைக் கற்றளி, தனி ஒரு பாறையை மேலிருந்து கீழ்நோக்கி செதுக்கி அமைக்கப்பட்டுள்ளது.

மலையின் கிழக்கு சரிவில் 100-க்கும் மேற்பட்ட சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இவை பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் செதுக்கப்பட்டவை. இவற்றின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் விவரங்கள் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு சமண சித்தாந்தம் போதிக்கப்பட்ட சமணப்பள்ளியும் செயல்பட்டு வந்துள்ளது. இதை உலக அளவில் பிரபலப்படுத்த, உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x