Published : 09 Jul 2019 11:41 AM
Last Updated : 09 Jul 2019 11:41 AM

தமிழகத்தில் தூர்வாரப்பட்ட ஏரிகளின் எண்ணிக்கை எத்தனை? - துரைமுருகன் கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதில்

தமிழகத்தில் மொத்தமாக 1,406 ஏரிகளில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, எதிர்க்கட்சி துணைத்தலைவரும் திமுக பொருளாளருமான துரைமுருகன், "திமுக ஆட்சியில் ஏரிகள் தூர்வாரப்பட்டன. ஒவ்வொரு தொகுதியிலும், எந்தெந்த ஏரிகளைத் தூர்வார வேண்டும் எனக் கேட்டு, அந்தந்த ஏரிகளைத் தூர்வாரியிருக்கிறோம். இப்போதைய ஆட்சியில் தூர்வாரப்பட்ட ஏரிகளின் பட்டியல் கேட்டும் தரப்படவில்லை" எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் பொதுப்பணித்துறைக்குச் சம்பந்தமான ஏரிகள் 14,000. பொதுப்பணித்துறையும் உள்ளாட்சித் துறையும் சேர்ந்து 39,000 ஏரிகள் உள்ளன. அனைத்து ஏரிகளையும் தூர்வாரினால் தான் பருவ காலங்களில் பெய்யும் மழைநீரைச் சேமித்து வைக்க முடியும்.

அதற்காக, தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தை பரீட்சார்த்த முறையில் 100 கோடி ரூபாய் ஒதுக்கி, 1500 ஏரிகளை, அந்த ஏரியால் பாசனப் பயன்பெறும் விவசாயிகளை உட்படுத்தி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

2016-2017 ஆம் ஆண்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 1,513 ஏரிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. 2017-18 ஆம் ஆண்டில் 1,511 ஏரிகளைத் தூர்வாருவதற்காக 328 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தமாக, 1,406 ஏரிகளின் பணிகள் முடிக்கப்பட்டிருக்கின்றன. மற்ற ஏரிகளில், சிறு பிரச்சினைகள், விவசாய சங்கங்களிடையே ஒற்றுமையின்மை காரணமாக தடைப்பட்டிருக்கின்றது. அதனையும் சரிப்படுத்தி வருகிறோம். 2019-2020 ஆம் ஆண்டில் 1,829 ஏரிகளுக்கு 499 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

நிதி ஒதுக்கீடு இல்லாததால் ஏரிகளை மொத்தமாக தூர்வார முடிவதில்லை. அதனால் படிப்படியாகத் தூர்வாருகிறோம். இப்பணிகளைக் கண்காணிப்பதற்காக சிறப்பு அதிகாரியாக பாலாஜி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். டெண்டர் விட்டால் சரிவராது என்பதால் மக்கள், விவசாயிகளாலேயே இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன" என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

அதற்கு துரைமுருகன், "உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அதில் நான் மாறுபடவில்லை. ஏற்கெனவே தூர்வாரப்பட்ட ஏரிகளின் பட்டியலைக் கேட்டேன்", எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, "தனி அதிகாரி நியமித்திருக்கிறோம். இதனால், எந்த அரசியல் குறுக்கீடும் இல்லை. யாருடைய சிபாரிசும் இருக்கக் கூடாது. நிதியும் விவசாயிகளிடம் தான் போகிறது. பதிவு செய்யப்பட்ட பாசன விவசாய சங்கங்கள் மூலமாகத் தான் பணிகள் கொடுக்கப்படுகின்றன. தவறு நடந்திருந்தால் சுட்டிக் காட்டலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x