Published : 11 Jul 2019 01:19 PM
Last Updated : 11 Jul 2019 01:19 PM

வைகோவுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்: குடியரசு துணைத் தலைவருக்கு சசிகலா புஷ்பா கடிதம்

தமிழ் சமுதாயத்தை பிரதமருக்கு எதிராக தூண்டிவிடுகிறார், அவருக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளார்.

புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களில் திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்வு செய்யப்பட உள்ளார்.

இந்நிலையில் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாக இருந்த தடையும் நீங்கியது. 124(எ) பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத்தண்டனை கிடைத்தாலும் அது தகுதி இழப்பை உருவாக்காது என்பதால் அவர் தடையின்றி மாநிலங்களவை உறுப்பினராகிறார்.

வைகோ மாநிலங்களவை உறுப்பினராவதற்கு ஆட்சேபம் தெரிவித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கடும்கண்டனம் தெரிவித்து குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதம் வருமாறு:

“தமிழக மாநிலங்களவை உறுப்பினராக வைகோ மனுதாக்கல் செய்துள்ளார். அவர் மீது போலீஸார் தேசத்துரோக வழக்கு பிரிவு 124(எ) கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதில் ஓராண்டு சிறைதண்டனை கொடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டால் மட்டுமே பதவி ஏற்கமுடியாது.

அதே நேரம் தார்மீக ரீதியாக வைகோ மாநிலங்கவையில் பதவி ஏற்பு பிரமாணம் ஏற்க தகுதியற்றவர். அவர் தொடர்ச்சியாக தேசவிரோத கருத்துக்களையும், பிரமருக்கு எதிரான கருத்துக்களையும் கூறிவருகிறார். பிரதமரை தமிழினத்திற்கு எதிரானவர் என்கிற சித்தரிப்பை தமிழ் சமுதாய மக்களிடையே உருவாக்கி வருகிறார். தொடர்ந்து அவரது பேச்சு பிரதமருக்கு எதிரான ஒரு அலையை தமிழ் சமூகத்தில் உருவாக்கி வருகிறது.

தனக்களிக்கப்பட்ட தண்டனைக்குப்பிறகும் அவர் அளித்த பேட்டியில் தனது நிலையிலிருந்து மாறமாட்டேன், அதே தனது நிலைப்பாட்டில் தொடருவேன் என பகிரங்கமாக பேட்டி அளிக்கிறார். இது நீதித்துறையை அவமதிக்கும் தண்டனைக்குரிய செயலாகும். இதற்கு எதிராக நான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.

தாங்கள் மேற்கண்ட நிலையை கருத்தில் கொண்டு வருங்கால இளைஞர் சமுதாயத்தை காக்கும் தார்மீக கடமை அடிப்படையில் தேசத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x