Last Updated : 05 Jul, 2019 12:00 AM

 

Published : 05 Jul 2019 12:00 AM
Last Updated : 05 Jul 2019 12:00 AM

சிறையிலிருந்து விடுதலையான பிறகு நந்தினிக்கு திருமணம்: சட்ட மாணவியின் தங்கை நிரஞ்சனா தகவல்

சட்ட மாணவி நந்தினி சிறையில் இருந்து விடுதலையான பிறகு திருமணம் நடைபெறும் என்று அவரது தங்கை நிரஞ்சனா தெரிவித்தார்.

மதுரையைச் சேர்ந்தவர் ஆனந்தன் (55). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நந்தினி (24) மதுரை சட்டக் கல்லூரியில் பயின்றார். நிரஞ்சனாவும் அதே சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறார்.

நந்தினி படிக்கும்போதே தனது தந்தை ஆனந்தனுடன் சேர்ந்து தமிழகத்தில் மதுக் கடைகளை மூட வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக இவர்கள் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நந்தினி 2 முறை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

2014-ல் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் அரசு மதுக் கடைகளை மூட வலியுறுத்தி நந்தினி தனது தந்தையுடன் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தபோது, போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், போலீஸாரை தாக்கியதாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு ஜூன் 27-ல் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாட்சியமளிக்க வந்த போலீஸாரிடம் நந்தினி சில கேள்விகளை எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது என எச்சரித்தார். அங்கிருந்த நந்தினியின் தந்தை ஆனந்தனும் மகள் எழுப்பிய கேள்வியில் தவறு ஏதுமில்லை எனக் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். சிறிது நேரத்துக்குப் பின், “நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டோம்’’ என எழுதிக் கொடுத்தால் இருவரையும் விடுவிப்பதாக நீதிபதி கூறினார். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. இதையடுத்து தந்தை, மகள் இருவரையும் போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

நின்றுபோன திருமணம்

இதனால், நந்தினிக்கும் ஆனந்தனின் நண்பரான கரூரைச் சேர்ந்த சக்திவேல் மகன் குணா ஜோதிபாசுவுக்கும் மதுரையில் இன்று (ஜூலை 5) நடைபெற இருந்த திருமணம் நின்றுபோனது. நீதிமன்றத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுப்பதில்லை என்ற நந்தினியின் முடிவை மணமகன் குணா ஜோதிபாசு மற்றும் அவரது குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டனர்.

இதுகுறித்து நந்தினியின் சகோதரி நிரஞ்சனா கூறியதாவது: திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் இனிமேல் இதுபோன்று பேச மாட்டோம் என எழுதிக் கொடுக்க வலியுறுத்தப்பட்டது. தவறே செய்யாமல் வருத்தம் தெரிவிக்க முடியாது என நந்தினி அதைத் தவிர்த்தார்.

சிறையிலிருந்து விடுதலையான பிறகு திருமணத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது. திருப்பத்தூர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்தால் மட்டுமே ஜாமீன் கிடைக்கும் என வழக்கறிஞர்கள் கூறியதால் உயர் நீதிமன்றத்தை அணுகும் முடிவை கைவிட்டோம். ஜூலை 9-ல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

திருமணம் நின்றது எங்களுக்கு கஷ்டமாகத்தான் உள்ளது. ஏற்கெனவே உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தாலும் தற்போதைய சூழலைச் சொல்லி விட்டோம். எனது சகோதரி, தந்தையை விடுதலை செய்யக்கோரி, 8-ம் தேதி முதல் மதுரை சட்டக் கல்லூரி முன் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x