Published : 03 Jul 2019 03:14 PM
Last Updated : 03 Jul 2019 03:14 PM

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட வேண்டும்: வைகோ

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்வது பற்றி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் விருப்பம் குறித்து வெளிவந்துள்ள செய்தியை மதிமுக வரவேற்கிறது.

ராம்நாத் கோவிந்த் 2017-ம் ஆண்டு அக்டோபரில் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற சட்ட வல்லுநர்கள் மாநாட்டில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்ததையும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 02.11.2018 அன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பத்திரிகையாளர்களிடம் உரையாடுகின்றபோதும் இதே கருத்தினை வலியுறுத்திக் கூறினார்.

நீதிமன்ற நடவடிக்கைகளை, வழக்கறிஞர்களின் வாதங்களை, தீர்ப்பு ஆணையின் விவரங்களை தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த முயற்சி பெரிதும் பயன்தரும் என்பதில் ஐயமில்லை.

இதன் விளைவாக ஆங்கிலம் தவிர இந்தி, கன்னடம், தெலுங்கு, அஸ்ஸாமி மற்றும் ஒடியா என ஐந்து மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால், அந்தப் பட்டியலில் உயர் தனிச் செம்மொழியாகவும், இலக்கண இலக்கியங்களை நிரம்பப் பெற்று உலகின் மூத்த மொழியாகவும் திகழும் தமிழ் மொழி இடம் பெறாதது நமக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் சிறப்பிடம் வகிக்கும் தமிழ் மொழிக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது தாங்க இயலாத மனவேதனையைத் தருகிறது.

சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளை வலுக்கட்டாயமாக இந்தி பேசாத மாநில மக்களிடம் திணித்து அவர்களது வெறுப்பையும் அவநம்பிக்கையையும் பெறும் வகையில் நாள்தோறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு இவ்வேளையில் தமிழ் மொழியையும் மற்ற மாநில மொழிகளையும் அலட்சியப்படுத்தி புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த நீதிமன்றத் தீர்ப்பின் மொழி மாற்ற நடவடிக்கை மேலும் பல ஐயங்களை உருவாக்கி விடும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மொழி மாற்றம் செய்யப்படுவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்ற அதேவேளையில் அந்தப் பட்டியலில் தமிழ் மொழியும் இடம் பெற வேண்டும். அத்துடன் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளுக்கும் அந்த வாய்ப்பினை அளிக்க வேண்டும் என்று மதிமுகவின் சார்பில் வற்புறுத்துகிறேன்.

மற்ற மாநில மொழிகளிலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட திட்டம் உள்ளது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தாலும்கூட, எவ்வளவு காலத்தில் எந்தெந்த மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்படும் என்ற விவரங்கள் அதில் காணப்படவில்லை.

எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மொழி மாற்றம் செய்யும் பட்டியலில் தமிழ் மொழியையும் பிற மாநில மொழிகளையும் இணைத்திடுமாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை மதிமுகவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்", என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x