

சாத்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக உறுப்பினர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக அணி இரண்டாக உடைந்த பின்னர் டிடிவி தினகரன் தலைமையில் 22 எம்எல்ஏக்கள் வெளியேறினர். இதில் 18 எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் அகடிதம் கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவு உள்ளிட்ட சில காரணங்களால் 22 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் திமுக, அதிமுக மட்டுமே எதிர்த்துப் போட்டியிட்டன. அதிமுக ஆட்சியைக் காப்பாற்ற 4 எம்எல்ஏக்கள் தேவை என்கிற நிலையில் அதிமுக போட்டியிட்டது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும் வென்றது.
இதில் சாத்தூர் தொகுதியில் இழுபறி நீடித்து வந்த நிலையில் இறுதியில் 456 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வென்றார். இந்நிலையில் இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் சாத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக சீனிவாசன் போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் 456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
தேர்தலில் குளறுபடிசெய்து அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார் என்றும், அந்த வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் சீனிவாசன் இன்று தேர்தல் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.