Last Updated : 03 Jul, 2019 11:41 AM

 

Published : 03 Jul 2019 11:41 AM
Last Updated : 03 Jul 2019 11:41 AM

உளுந்தூர்பேட்டை அருகே கொத்தடிமைகளாக ஆடு மேய்த்து வந்த 5 சிறுவர்கள் மீட்பு

உளுந்தூர்பேட்டை அருகே கொத்தடிமைகளாக ஆடு மேய்க்கும் பணி செய்து வந்த 5 சிறுவர்களை வருவாய்த்துறையினர் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் இடைநின்ற பள்ளி மாணவர்கள் 5 பேர் கொத்தடிமைகளாக ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தேசிய ஆதிவாசி ஒற்றுமை சபை என்ற அமைப்பு நிர்வாகிகள் திருக்கோவிலூர் சார் ஆட்சியரிடம் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரு புகார் மனு அளித்தனர். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க திருக்கோவிலூர் சார் ஆட்சியர் சாருஸ்ரீ, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் இன்று காலை உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் வேல்முருகன் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் கொத்தடிமை மீட்புப் பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் உளுந்தூர்பேட்டையை அடுத்த மேட்டூர் பகுதியில் அதிரடி ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம் வேடங்குப்பம், விழுப்புரம் மாவட்டம் எடப்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த வறுமையின் காரணமாக இடைநின்ற பள்ளி மாணவர்கள் என்பதும் அவர்கள் குடும்ப வறுமை காரணமாக கொத்தடிமைகளாகச் சென்று செங்கம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த துரை ஆகிய இருவரிடமும் ஆடு மேய்க்கும் பணிக்காகச் சேர்ந்து தற்போது ஆடு மேய்த்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த 5 பேரும் ஏற்கெனவே கொத்தடிமைகளாக ஆடுமேய்த்த போது இவர்கள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் மீண்டும் இரண்டாவது முறையாக குடும்ப கஷ்டத்தைப் போக்க மீண்டும் பணத்தைப் பெற்று பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு பணிக்காக வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கொத்தடிமையாக இருந்த ஐயப்பன், கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், சின்னராசு, ராமு ஆகிய 5 பேரும் மீட்கப்பட்டு திருக்கோவிலூர் சார் ஆட்சியர் சாருஸ்ரீ முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து வெளியில் நின்ற மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் இந்த சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். அத்துடன் அவர்கள் தொடர்ந்து கல்வியைப் பயில வேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x