Published : 03 Jul 2019 02:17 PM
Last Updated : 03 Jul 2019 02:17 PM

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நகலை தமிழிலும் வெளியிடுக: நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு ரவிக்குமார் எம்.பி. நோட்டீஸ்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நகல்களை வெளியிடும் மாநில மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும் என, நாடாளுமன்ற விசிக எம்.பி. ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் விவரங்கள், ஆங்கில மொழியில் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்படுவது வழக்கம். இனி, ஆங்கிலத்துடன் இந்தி, அஸ்ஸாமி, கன்னடம், ஒடியா, தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு தீர்ப்புகள் பதிவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான மென்பொருளை உச்ச நீதிமன்றத்தின் மின்னணு மென்பொருள் பிரிவு உருவாக்கியுள்ளது. தலைமை நீதிபதியும் இந்த மென்பொருள் பயன்பாட்டுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்திற்குள் இது நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

தென்னிந்திய மொழிகளில் கன்னடமும் தெலுங்கும் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் இடம்பெறாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எந்த மாநில உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு அதிக அளவிலான மேல்முறையீட்டு வழக்குகள் வருகிறதோ அந்த மாநில மொழிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த 5 மொழிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழையும் இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்திருப்பதாக, விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் இன்று (புதன்கிழமை) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை இந்தி, அஸ்ஸாமி, ஒடியா, தெலுங்கு, கன்னடம் ஆகிய மாநில மொழிகளிலும் வெளியிடுவதென்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ள நிலையில் செம்மொழியான தமிழ் இந்தப் பட்டியலில் விடுபட்டிருப்பது அநீதி.

உடனே தமிழையும் இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்திருக்கிறேன்" என ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x