Published : 10 Jul 2019 11:34 AM
Last Updated : 10 Jul 2019 11:34 AM

வேலூர் தேர்தல் முடிவு, திமுக சரிவின் தொடக்கமாக அமையும்: எச்.ராஜா

வேலூர் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய சரிவைச் சந்திக்கும் என்று பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூரில் அமைந்துள்ள நரசிம்மப் பெருமாள் கோயிலில் எச்.ராஜா தரிசனம் செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பொதுத் தேர்தலில் பொய்யைச் சொல்லி, திமுகவினர் வாக்குகளைத் திருடிவிட்டனர். தேர்தல் நடைபெற வேண்டிய தொகுதிகளில் இடைத் தேர்தல்கள் விரைவில் நடைபெறும்.

நாங்குநேரி இடைத் தேர்தல் எப்போது அறிவிக்கப்படுகிறதோ, அப்போது நடக்கும். வேலூர் மக்களவை இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். வேலூர் தொகுதி தேர்தல் முடிவு, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியுடைய சரிவின் தொடக்கமாக அமையும் என்பது எனது கருத்து'' என்றார் எச்.ராஜா.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற சூழ்நிலையில், வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கதிர் ஆனந்த் வீட்டில் மார்ச் 29, 30 தேதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. அதற்கு இரண்டு நாள் கழித்து ஏப்ரல் 1 மற்றும் 2-ம் தேதி துரைமுருகனின் நெருங்கிய உறவினரும் திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி வீடு, சிமெண்ட் குடோனில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.11 கோடியே 48 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் முன்பு அறிவித்தபடி, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என அதிமுக அறிவித்துள்ளது. திமுக வேட்பாளராக மீண்டும் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x