Last Updated : 12 Jul, 2019 03:02 PM

 

Published : 12 Jul 2019 03:02 PM
Last Updated : 12 Jul 2019 03:02 PM

முதல்வருக்கே அதிகாரம்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி: நாராயணசாமி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரமுள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி என,முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என முதல்வரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு சென்றிருந்தார்.

மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது எனவும் அமைச்சரவை எடுக்கும் முடிவுகளில் துணைநிலை ஆளுநர் தலையிட முடியாது என இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கி துணைநிலை ஆளுநரின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை தொடர்ந்து இவ்வழக்கின் தீர்ப்பு குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, "ஏற்கெனவே உயர் நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது எனவும் இந்திய அரசியலமைப்பு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்படி மாநில அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது  மாநிலத்தின் அமைச்சரவைக்கும் துணைநிலை ஆளுநருக்கும் கருத்து வேறுபாடு இருந்தால் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்த வழக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உள்ளது என  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக நடைமுறையில் உள்ளது", என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இந்த தீர்ப்பு புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் இந்த தீர்ப்பின் மூலம் ஜனநாயகம் வென்றுள்ளதால் உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துகொள்வதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், மூன்றாண்டுகளாக புதுச்சேரி வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டுமென பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி வருகிறேன். தீர்ப்பின் மூலம் பிரதமர் மோடி எங்களது கோரிக்கைக்கு செவி சாய்ப்பார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

கிரண்பேடி தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் பிரச்சினையில் தேவையில்லாமல் பேசினார் எனவும் அரசு வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு இந்த வழக்குக்காக டெல்லி சென்று ஒரு வாரம் முகாமிட்டிருந்ததாக நாராயணசாமி குற்றம்சாட்டினார். தீர்ப்பு வந்ததை அடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு முதல்வர் நாராயணசாமி இனிப்புகளை வழங்கியும் அவரது ஆதரவாளர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x