

மக்களுக்காகப் போராடியது குற்றமா என்று சமூக செயற்பாட்டாளர் முகிலனின் மனைவி கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.
திருப்பதியில் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய நிலையில், ஆந்திர மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்ட சமூக செயற் பாட்டாளர் முகிலன் தமிழக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை சென்னைக்கு அழைத்து வந்த சிபிசிஐடி காவல்துறையினர், எழும்பூரில் உள்ள அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த பெண் ஒருவர், முகிலன் மீது பாலியல் புகார் கொடுத்து இருந்தார். இந்த புகாரின் பேரில் முகிலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கரூர் மாவட்ட சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதனால் முகிலனை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கரூர் நீதிமன்றத்தில் முகிலனை சிபிசிஐடி போலீஸார் இன்று ஆஜர்படுத்துகின்றனர்.
இதுதொடர்பாக நேற்று இரவு கரூரில் முகிலனின் மனைவி பூங்கொடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ''கொலை செய்தவர்கள், கொள்ளைக்காரர்கள் எல்லாம் நாட்டில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர். முகிலன் என்ன தவறு செய்துவிட்டார்? மக்களுக்காகப் போராடியது குற்றமா?
இரவு ஓய்வெடுத்துவிட்டு, காலையில்தான் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்துவதாகக் கூறினர். ஆனால் அரை மணி நேரத்தில், உடனடியாகக் கிளம்பி வரச்சொன்னார்கள். மாஜிஸ்திரேட் முன்னால் உடனடியாக இப்போதே ஆஜர் படுத்தவேண்டும் என்கின்றனர்.
மக்களிடம் ஒன்றே ஒன்றுதான் கேட்க விரும்புகிறேன். முகிலன் என்ன தப்பு செய்தார்? அவர் இனிமேல் போராட்டத்துக்கு வரக்கூடாது. அவரைப் போல யாருமே இனி வரக்கூடாது என்பதற்காக இவ்வாறு சதி செய்கின்றனர்.
ஆளும் வர்க்கம்தான் இந்த செயலில் ஈடுபடுகிறது. அந்தப் பெண் யாருடைய தூண்டுதலிலோதான் பாலியல் புகாரைக் கூறியுள்ளார். முகிலனை அடைத்துவைத்து சித்திரவதை செய்துள்ளனர். ஸ்டெர்லைட் தொடர்பான மற்றொரு சிடி வெளியானால், அரசுக்குப் பிரச்சினை என்பதால் இருட்டு அறையில் அடைத்து வைத்துள்ளனர். நாயைவிட்டுக் கடிக்கச் செய்துள்ளனர்.
அவருடன் தனியாகப் பேச என்னை அனுமதிக்கவில்லை. இதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்போம்'' என்றார் பூங்கொடி.