

சென்னை புளியந்தோப்பில் வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு சென்ற சிறுமியை கடத்திச் சென்று அடைத்து வைத்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். பலாத்காரம் செய்த 5 ஆண்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராதா(45) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மூன்றாவது மகளுக்கு 15 வயது ஆகிறது. ராதா தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த 3-ம் தேதி அவர் பணிக்குச் சென்ற நேரத்தில் மூன்றாவது மகள் பெரிய பாட்டியுடன் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
நேராக தனது தோழி வீட்டுக்கு சென்ற அவர் அங்கு அவர்கள் புத்திமதி சொல்லி அனுப்பிய பின்னர் தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார், அப்போது வியாசர்பாடி சத்யா நகரைச் சேர்ந்த சிறுமிக்கு அறிமுகமான ஜமீனாபேகம்(31) என்பவர் சிறுமியிடம் ஏன் முகவாட்டத்துடன் இருக்கிறாய் என்று விசாரித்துள்ளார்.
தான் பாட்டியுடன் சண்டைப்போட்டுக்கொண்டு வீட்டைவிட்டு கோபித்துக்கொண்டு வந்ததை சிறுமி தெரிவிக்க நீ செய்ததுதான் சரி என்னுடன் வந்து ஒரு நாலுநாள் தங்கு அவர்கள் தேடி அலையட்டும், அப்பத்தான் உன் அருமை தெரியும் என நைச்சியமாக பேசி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
வியாசர்பாடியில் உள்ள தனது வீட்டில் சிறுமியை தங்க வைத்த ஜபீனாபேகம் மறுநாள் மதியம் அதேபகுதியைச் சேர்ந்த முபினா பேகம்(37) என்பவருடன் சிறுமியைஆட்டோவில் ஏற்றி அழைத்துக்கொண்டு புரசைவாக்கத்தில் வசிக்கும் நிஷா(36) என்பவர் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
நிஷாவிடம் சொல்லி வேலை வாங்கித்தருவதாகவும், பின்னர் நீ யார் தயவையும் நம்பாமல் சொந்தக்காலில் நிற்கலாம் என கூறி அழைத்து வந்துள்ளனர். அங்கு வந்தவுடன் தங்களது சுய ரூபத்தை காட்டத்தொடங்கிய அவர்கள் சிறுமியை தனி அறையில் அடைத்து வைத்துவிட்டு சிலருக்கு போன் செய்து வரவழைத்துள்ளனர்.
மூன்று நாட்கள் சிறுமியை 5 நபர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுமியை காணவில்லை என்று அவருடைய உறவினர்கள் புளியந்தோப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்துள்ளனர்.
மூன்று நாட்கள் சிறுமியை தனி அறையில் அடைத்து வைத்திருந்த 3 பெண்களும் பின்னர் 9-ம் தேதி மாலை சிறுமியை விடுவிப்பதாகவும் நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி மிரட்டி ஆட்டோவில் ஏற்றி சிறுமியின் வீட்டருகே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
பயந்துப்போன சிறுமியும் வீட்டுக்கு வந்து யாரிடமும் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துள்ளார். தாயார் ராதா, சிறுமியை அழைத்துக்கொண்டு புளியந்தோப்பு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் சஜீபா முன் ஆஜர் படுத்தியுள்ளார். சிறுமியை விசாரித்த ஷஜிபா நடந்த கதையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக போலீஸாருடன் சென்று முபினாபேகம், ஜபீனா பேகம், நிஷா மூன்றுபேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தார். அவர்களிடம் விசாரணை நடத்தினார். அவர்கள் பாலியல் தொழிலில் சிறுமியை ஈடுபடுத்தியது தெரியவந்தது.
அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீஸார், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 5 நபர்களை தேடி வருகின்றனர். இந்த கும்பல் இதேப்போன்று வேறு சிறுமிகள், இளம்பெண்களையும் ஆசைவார்த்தைக்கூறி இதேப்போன்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சிறுமிக்கு நேர்ந்த நிலை அப்பகுதி மக்கள், போலீஸார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.5 பேரையும் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வீட்டில் என்னதான் மனக்கஷ்டம் இருந்தாலும் இளம் பருவத்தினர் வீட்டைவிட்டு வெளியேறுவது அவர்கள் வாழ்க்கையை பாதிக்கும், குறிப்பாக பெண் குழந்தைகள் வாழ்க்கை சீரழியும், குடும்பம் ஒன்றே அவர்களுக்கு பாதுகாப்பு.
பெற்றோரைத்தவிர வேறு யாரும் அவர்கள் நலனில் அக்கறை காட்டமுடியாது. கண்டித்தாலும் அது எதிர்கால வாழ்க்கைக்கே, அதற்காக வீட்டைவிட்டு ஓடுவது, தவறான முடிவை தேடுவது தவறு என போலீஸார் எச்சரித்துள்ளனர்.