Last Updated : 03 Jul, 2019 04:24 PM

 

Published : 03 Jul 2019 04:24 PM
Last Updated : 03 Jul 2019 04:24 PM

சாலை விபத்துகளை தடுக்க ‘நோ ஹெல்மெட்; நோ என்ட்ரி’திட்டம்: மேற்கு மண்டல காவல்துறை தலைவர் தகவல்

சாலை விபத்துகளை தடுக்க மேற்கு மண்டல காவல்துறையில் ‘நோ ஹெல்மெட்; நோ என்ட்ரி’ திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, இருசக்கர வாகன ஓட்டுநர்கள், அவர்களுக்கு பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாமல், சாலை விதிகளை பின்பற்றாமல் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துவருகின்றனர். இந்நிலையில், சாலை விபத்துகளை குறைக்க ‘நோ ஹெல்மெட்; நோ என்ட்ரி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் இத்திட்டம் அமலுக்குவந்துள்ளது.

இதுகுறித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் கே.பெரியய்யா கூறும்போது,‘‘காவல்துறையின் தீவிர விழிப்புணர்வால் கடந்தாண்டை விட, நடப்பாண்டு இதே காலகட்டத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன. கடந்த ஜனவரியில் இருந்து நேற்று வரை மேற்கு மண்டலத்தில் மொத்தம் 6,598 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 1,163 பேர் உயிரிழந்துள்ளனர். இதே காலகட்டத்தில் கடந்தாண்டு 7,510 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 1,436 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜனவரி முதல் நேற்று வரை ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 4 லட்சத்து 60 ஆயிரத்து 949 வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விபத்துகளை குறைக்க ‘நோ ஹெல்மெட்; நோ என்ட்ரி’ திட்டம் சில தினங்களுக்கு முன்னர் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, முக்கிய வீதிகளில் வாகன ஓட்டுநர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வரும் சூழ்நிலை ஏற்படும். உதாரணத்துக்கு, பொள்ளாச்சி டவுன் பகுதியின், பிரதான வீதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வலியுறுத்தப்படும். அங்கு இது தொடர்பான எச்சரிக்கை பலகையும் வைக்கப்படும். போலீஸார் கண்காணிப்பு கூடுதலாக இருக்கும். அந்த சாலையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் சென்றால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இத்திட்டம் முதல் கட்டமாக ஈரோடு மற்றும் நாமக்கலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இந்த திட்டம் ஓரிரு நாட்களில் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்றார்.

‘விபத்து இல்லாத நாள்’

ஐ.ஜி. பெரியய்யா மேலும் கூறும்போது,‘‘ மேற்கு மண்டல மாவட்டங்களில் விபத்து இல்லாத நாள் என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. மாதத்தில் ஒரு தேதி நிர்ணயித்து, அந்த தேதியில் விபத்துகள் ஏற்படக்கூடாது என திட்டமிட்டு, அதற்கான விழிப்புணர்வு போலீஸாரால் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்துக்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் தங்களது கடமையை உணர்ந்து, சாலை விதிகளை அந்த நாளில் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த திட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x