Last Updated : 11 Jul, 2019 12:15 PM

 

Published : 11 Jul 2019 12:15 PM
Last Updated : 11 Jul 2019 12:15 PM

காட்டுமன்னார்கோவில் அருகே 60 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த வாய்க்கால் மீட்பு: பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை

காட்டுமன்னார்கோவில் அருகே 60 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வாய்க்காலை பொதுப்பணித் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டனர்.

தமிழகத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவும் நிலையில், ஆக்கிரமிப்பில் உள்ள நீர் நிலைகளை மீட்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பொதுப்பணித் துறையினர் பல்வேறு பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், அணைக்கரை பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் அருணகிரி, உதவி பொறியாளர் வெற்றிவேல் தலைமையில் காட்டுமன்னார்கோவில் அருகே நீர்நிலை ஆக்கிரப்புகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.

காட்டுமன்னார்கோவில் கண்டமங்கலத்தில் இருந்து குருங்குடி வரையிலான 3 கி.மீ. தொலைவுக்கு புதுவாய்க்கால் என அழைக்கப்படும் குருங்குடி வாய்க்கால் இருந்தது. இந்த வாய்க்கால் பாசனம் மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்துள்ளது. ஆனால், 60 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்பட்டது. வாய்க்கால் பகுதியில் 15க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து முருங்கை, கத்திரி, கொத்தவரை, பூச்செடிகளை பயிரிட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, இந்த வாய்க்கால் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து வருவாய்த் துறையினரின் உதவியுடன் வாய்க்காலை மீட்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் 10 நாள்களில் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை விவசாயிகள், பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x