Last Updated : 09 Jul, 2019 09:29 AM

 

Published : 09 Jul 2019 09:29 AM
Last Updated : 09 Jul 2019 09:29 AM

8-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரம்மாண்ட புலிக்குத்தி நடுகல்!- கிணத்துக்கடவு அருகே கண்டெடுப்பு

கோவையைச் சேர்ந்த கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் தமிழ்மறவான் ராமேசு,  கிணத்துக்கடவு அருகேயுள்ள  கப்பாளாங்கரை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, துரைசாமி என்ற விவசாயிக்குச்  சொந்தமான தோட்டத்தில், கிழக்கு திசையில்,  வீரன் ஒருவன் புலியை ஈட்டியால் குத்துவதுபோன்ற நடுகல் சிற்பம் கண்டறிந்துள்ளார். ஆறு அடி உயரம், ஐந்து அடி அகலம் என பிரம்மாண்டமாக உள்ளது இந்த நடுகல் சிற்பம்.

இதுகுறித்து அவரிடம் பேசினோம். "இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது,  விவசாயி துரைசாமிக்கு சொந்தமான தோட்டத்தில் நடுகல் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தேடிச் சென்று, துரைசாமி, அவரது மகன் சதீஷ்குமாரிடம் பேசினேன்.

அவர்கள் என்னை சோளக் காட்டுக்கு அழைத்துச் சென்று, ஆறு அடி உயரம்,  ஐந்து அடி அகலம் கொண்ட, பிரம்மாண்ட நடுகல்லைக்  காண்பித்தனர்.

வீரன் ஒருவன்,  தனது கால்களை இரண்டு அடி அகல விரித்து,  இடது காலை சற்று மடங்கிய நிலையில் முன்புறமும், வலது காலை பின்புறம் நிலத்தில் உறுதியாக ஊன்றிய நிலையில் நிற்கிறான். மிகுந்த  ஆக்ரோஷத்துடன், நீளமான ஈட்டியை,  தன் மீது  பாய வரும் ஆண் புலியின் தாடையில் குத்துவதைப்போல இந்த சிற்பம்  செதுக்கப்பட்டுள்ளது.

வீரன் பிடித்துள்ள ஈட்டி, புலியின் கழுத்துப் பகுதியில் குரல்வளையைத் துளையிட்டு, சதையை பிய்த்துக்கொண்டு மூன்று அங்குலம் வெளியே நீண்டு காட்சியளிக்கிறது. வீரனின் வலப்புற இடையில்  சிறு கத்தி, தலையின் பின்புறம் குடுமி உள்ளது. தலையின் முன் பகுதியில் சிறிய கொண்டை தலைப்பாகையும்  உள்ளது. நடுகல் சிதைந்த நிலையில் உள்ளதால்,  இந்த புலிக்குத்தி கல் கூறும் வரலாற்றை சரியாக உத்தேசிக்க இயலவில்லை.

இது தொடர்பாக, தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் ஜெகதீசனிடம் ஆலோசித்தபோது, 'புலிக்குத்தி கல் சிலையின் தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது,  8 அல்லது 9-ம் நூற்றாண்டுக்கு உட்பட்டதாக இருக்கலாம்' என்றார்.

மணிமேகலை காப்பியம்!

சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலை  காப்பியத்தில், 'அசலன் என்பவன் பசுவின் மகனாகவும், சிருங்கி என்பவன் மானின் மகனாகவும், விருஞ்சி புரையோர், கேச கம்பளன்  புலியின் மகன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, வீரன் கம்பளன் என்பவன், பசுக்களைக் காப்பதற்காக பிறந்து, கம்பைக் கொண்டு அவற்றைப் பாதுகாக்கிறான் என்பதை இதற்குப் பொருளாக கருதலாம்.

கம்பளன் என்னும் பெயர் கொண்ட  வீரன், பசுக்களைக் காப்பதற்காக கரந்தை என்ற இடத்தில் நடந்த போரில் உயிர் நீத்திருக்கலாம். இதனால், உயிர் நீத்தவனின் பெயரே கப்பளாங்கரை என்று மருவியிருக்கலாம்.

நடுகல் வரலாறு!

தமிழர்களின் நற்பண்புகளையும்,  அறநெறிகளையும் இக்காலத்தவர்கள் தெரிந்து கொள்ள நடுகற்கள் பெரிதும் உதவுகின்றன.

வீரனுக்கான நடுகல், வீரக்கல், நாய்க்கு நடுகல்,கோழிக்கு நடுகல், பன்றி குத்தி நடுகல், புலிக்குத்தி நடுகல், போரில் மாண்டவருக்கு எழுப்பப்பட்ட நினைவுத் தூண்கள், நரை மீட்டோர் கல்,  பத்தினிக்கல், ஊர் காத்த வீரன் கல், அறம் காத்த வீரன் நடுகல்,  புலிக்கல், அரசர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகல், குதிரைக் குத்திக்கல், ஏறு தழுவுதல் நடுகல், உடன் கட்டை ஏறியது தொடர்பான நடுகற்கள் என தமிழகத்தில் ஏராளமான நடுகற்கள் கிடைத்துள்ளன.

சங்க காலத்தில் வீரர்களின் வீரத்தைப் போற்றும் வகையிலும், அவரது உயிர்த் தியாகத்தை மதிக்கும் வகையிலும், வீரனின் உருவம் பொறித்த நடுகல்லை நட்டு, அதை வழிபடுவது பழங்கால தமிழர் மரபின் அடையாளமாகவே  இருந்துள்ளது.

யாருக்கு அமைக்கப்படும் நடுகல்?

போரில் இறந்த வீரர்கள், பசுக்களை மீட்டவர்கள், பத்தினிப் பெண்கள் ஆகியோர் நடுகல் எடுப்பதற்கு தகுதியுடையவர்களாக கருதப்பட்டனர். போரில் இறந்தவர்களுக்காக  நடுகல் அமைக்கப்பட்ட செய்தியை அகநானூறு பாடலிலும், பசுவை மீட்டவர்களுக்கு நடுகல் அமைக்கப்பட்ட செய்தியை புறநானூறு பாடலிலும், பத்தினிப் பெண்களுக்கு  நடுகல் அமைக்கப்பட்ட தகவலை சிலப்பதிகாரத்திலும் காணலாம்.

எனினும், ஒருவர் உயிர் நீத்த பின்னரே, நடுகல் அமைக்கும்  பழக்கம்  பழந் தமிழர்களின் வழக்கமாக இருந்ததை அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் வாயிலாக  அறியலாம்.

நடுகற்களை சங்க இலக்கியத் தொடர்புகளோடு இணைத்து ஆராயும்போது, பசு, ஆடுகளை கவர்தல் அல்லது மீட்டல்,  வன விலங்குகளுடன் போரிட்டு, உயிரைத் தியாகம் செய்தல் ஆகியவற்றுக்காகவே அதிக நடுகற்கள் அமைக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. சமூகத்துக்காகவும், மக்களின் நலனுக்காகவும்  இறக்கும் வீரனுக்கே நடுகல் எழுப்பப்பட்டுள்ளது" என்றார் தமிழ் மறவான் ராமேசு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x