Published : 01 Jul 2019 01:47 PM
Last Updated : 01 Jul 2019 01:47 PM

மேகேதாட்டு அணை கட்டப்படும் என ராகுல் காந்தி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தீர்களா?- பேரவையில் முதல்வர் கேள்வி

கர்நாடகத்தில் மேகேதாட்டு அணை கட்டப்படும் என ராகுல் சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்தீர்களா என்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் கூறும்போது, ''தமிழகத்தில் மழை பொய்த்துவிட்டாலும் நிலத்தடி நீர் கீழே சென்ற பிறகும் முடிந்த அளவு தண்ணீரை விநியோகிக்கிறோம்.

கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மேகேதாட்டு அணை கட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி அளித்தார். காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்றும் ராகுல் கூறியிருந்தார். இவ்வாறு ராகுல் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தீர்களா?'' என்று காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய முதல்வர், ''கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் காவிரி நீரைத் தரவில்லை. சட்டம் மூலம் தீர்வைப் பெற்றிருந்தாலும் ராகுல் காந்தி அதைத் தடுக்க முயன்றார். அதே நேரத்தில் நீங்கள் காவிரி நீரைப் பெற ஏதேனும் அழுத்தம் கொடுத்தீர்களா'' என்று குற்றம் சாட்டினார்.

அத்துடன், ''ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக குரல் கொடுத்ததா'' என்று ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், ''காவிரி நீரைக் கொண்டுவருவது ஆளும் கட்சியின் பொறுப்பு'' என்று காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் ராமசாமி, முதல்வருக்குப் பதிலளித்தார்.

முன்னதாக, நாள் முழுவதும் தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் கோரினர். ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x