

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் தீர்ப்பு கூறுவதை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக அதே கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜ் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். தற்போது இவர்கள் 3 பேரும் ஜாமீனில் உள்ளனர்.
இந்நிலையில் நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க செயலர் சுகந்தி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், இந்த சம்பவத்தில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான உயர் அதிகாரிகள் பலருக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. யாருக்காக மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசினார் என்பது விசாரிக்கப்படவில்லை. இதனால் சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். அதுவரை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிர்மலாதேவி வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயனா, புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் வாதாடும்போது, நிர்மலாதேவி வழக்கில் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டியதில்லை என்றார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நிர்மலா ராணி வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.