

நேஷனல் புக் டிரஸ்ட்டின் (என்பிடி) சென்னை புத்தக மேம்பாட்டு மையத்தை மூட முயற்சி எடுக்கப்படுகிறது. இதனால், அதில் தம் நூல் வெளியிட விரும்பும் தமிழக எழுத்தாளர்களுக்கு டெல்லி அல்லது பெங்களூருக்கு அலையும் சூழல் ஏற்பட உள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் உயர்கல்வி பிரிவால் 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது நேஷனல் புக் டிரஸ்ட். ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட 23 இந்திய மொழிகளின் சிறந்த நூல்களை வெளியிடுவது அதன் நோக்கம். லாபநோக்கம் இன்றி அச்சிட்ட செலவின் விலையிலேயே அந்நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக இதில் குழந்தைகளுக்கான நூல்கள் அதிகம். என்பிடி மூலம் தம் நூல்களை வெளியிடுவது எழுத்தாளர்களுக்கு எளிதாகவும், லாபகரமாகவும் இருந்து வருகிறது.
எனவே, இப்பதிப்பகத்தில் தம் நூல்களை வெளியிட எழுத்தாளர்கள் அதிகம் விரும்புவது உண்டு. ஆனால், அவர்கள் ஒவ்வொரு முறையும் அதன் ஆலோசனைக்காக டெல்லிக்குப் பயணம் செய்து அவதிக்குள்ளாகினர். இதைத் தவிர்க்க, என்பிடி நூல்களின் விற்பனையுடன் சேர்த்து அதன் புத்தக மேம்பாட்டு மையங்களும் நாட்டின் பல பகுதிகளில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டன.
இதன் மூலம், எழுத்தாளர்கள் சந்தேகம் கேட்டு டெல்லி வரை அலையாமல், தம் வசிக்கும் பகுதியிலேயே அவற்றை தீர்த்துக் கொள்ளும் வசதி இருந்தது. பாட்னா, குவஹாத்தி, திரிபுரா, கட்டாக், மும்பாய், சென்னை, ஐதராபாத், கொச்சி ஆகிய நகரங்களில் அவை அமைந்தன.
இந்நிலையில், செலவைக் குறைப்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக என்பிடி தன் மேம்பாட்டு மையங்களை மூட முடிவு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் முதலாவதாக கேரளாவின் கொச்சியில் உள்ள மேம்பாட்டு மையம் கடந்த வருடம் மூடப்பட்டு விட்டது. அடுத்து சென்னையில் மூட இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறையின் அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ''டெல்லிக்கு வெளியே இருக்கும் மேம்பாட்டு மையங்கள் மூடும் முடிவை கடந்த வருடம் தலைவராக இருந்த பேராசிரியர் பல்தியோபாய் சர்மா.
இவர் செய்த தவறை புதிய தலைவரான பேராசிரியர் கோவிந்த் பிரசாத் சர்மாவும் சரிசெய்ய முன்வரவில்லை. இதற்கு இருவருமே பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் தீவிர ஆதரவாளர்கள் என்பது காரணம்'' எனத் தெரிவித்தனர்.
தமிழ் மொழி அறியாதவரிடம் பொறுப்பு
இதனிடையே, சென்னை உட்பட அதன் மையங்களில் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே அம்மாநில மொழிகள் அறிந்து, அதில் பிரச்சினை இல்லாமல் பணியாற்றியவர்கள்.
உடஇதேநிலை தமிழகத்திலும் ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் சென்னையின் பொறுப்பாளராக இருந்த ஒரு தமிழருக்குப் பதிலாக தமிழ் மொழி அறியாத மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவரை அப்பதவியின் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.