ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு
Updated on
1 min read

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதி தற்போது காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பளித்தது. ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றம் புரிந்திருப்பதாகக் கூறி அவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியதால் முதலமைச்சர் பதவி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளில் தொடரும் தகுதியை ஜெயலலிதா இழந்தார்.

ஒரு சட்டப்பேரவை தொகுதியில் உறுப்பினர் யாருமின்றி காலியிடம் ஏற்பட்டால் அங்கு 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம்தான் ஒரு தொகுதி காலியாக உள்ளது பற்றி அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கை வெளியான பிறகே அந்தத் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கை களை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள முடியும்.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத் தின் தீர்ப்பு நகல் தமிழக சட்டப்பேரவை தலைவருக்கு உடனடியாகக் கிடைக்காததால் ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது என்பது தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் வெளியிடாமல் இருந் தது. இந்நிலையில் தீர்ப்பின் நகல் சட்டப்பேரவை தலைவருக்கு அண்மையில் கிடைத்த பின், அந்த தீர்ப்பு பற்றி முழுமையாக ஆராய்ந்த சட்டப்பேரவை செயலகம், ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது என்ற அறிவிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது.

இந்த அறிவிக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கை தங்களுக்கு கிடைக்கப் பெற்றதை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக வட்டாரங்களும் உறுதிப்படுத்தின.

இந்த அறிவிக்கை குறித்து இன்று (திங்கள்கிழமை) தலைமை தேர்தல் அதிகாரி பரிசீலித்து, அது தொடர்பான தகவலை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவார் என்றும், அதன் பின்னர் ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஆணையம் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in