Published : 05 Jul 2019 09:30 AM
Last Updated : 05 Jul 2019 09:30 AM

வாகை சூடி வா... அபிநயா...

சர்வதேச அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க பார்சிலோனா சென்றுள்ளார் கோவையைச் சேர்ந்த மாணவி ஆர்.அபிநயா (17).

கோவை நேஷனல் மாடல் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் இவரது பெற்றோர் வி.ரகுபதி-ரேணுகாதேவி. ஐந்தாம் வகுப்பு முதலே ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் பயிற்சி பெற்று வரும் அபிநயா, கடந்த 7 ஆண்டுகளில் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 56-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில், தமிழக அணியில் இடம்பெற்றார் அபிநயா. இந்தப் போட்டியில் தமிழக அணி `டெர்பி` பிரிவில் வெற்றி பெற்றது. தமிழக அணியின் `ஸ்டார் ஸ்கேட்டராக` இதில் விளையாடினார் அபிநயா.

இந்த நிலையில், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள எசுப்பானியா நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெறும் சர்வதேச அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடுகிறார் அபிநயா. இப்போட்டி வரும் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் அபிநயா கலந்துகொள்கிறார். இதையொட்டி, இந்திய ரோலர் ஸ்கேட்டிங் சம்மேளனம் சார்பில் டெல்லியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற அபிநயா, அங்கிருந்து பார்சிலோனா சென்றுள்ளார்.

இது தொடர்பாக அபிநயாவின் பெற்றோரிடம் பேசியபோது, “தேசிய போட்டியில் வென்றபோது, `இந்து தமிழ்’ நாளிதழின் `கொங்கே முழங்கு’ பகுதியில் சிறப்புக் கட்டுரை பிரசுரமானது. இது, அபிநயாவுக்கு மிகுந்த ஊக்கம் கொடுத்தது. தற்போது சர்வதேச போட்டியில் பங்கேற்க சென்றுள்ளார். நிச்சயம் இப்போட்டியில் வென்று, தமிழகத்துக்கும், கோவைக்கும் பெருமை தேடித் தருவேன் என்று கூறிச் சென்றார். அதேபோல, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, பதக்கம் வெல்வதே தனது லட்சியமாகவும் வைத்திருக்கிறார்” என்றனர் பெருமிதத்துடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x