Last Updated : 07 Jul, 2019 12:00 AM

 

Published : 07 Jul 2019 12:00 AM
Last Updated : 07 Jul 2019 12:00 AM

36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் உதவியுடன் பலாலி விமான தளத்தை விமான நிலையமாக புனரமைக்கும் பணி: சென்னை, திருச்சிக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் விமான சேவை

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான தளத்தை இந்தியாவின் உதவியுடன் விமான நிலையமாகப் புனரமைக்கும் பணி தொடங்கியது.

இரண்டாம் உலகப் போரின்போது, ஆங்கிலேயர்களின் விமானப் படைக்காக 1940-ல் இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலியில் விமான தளம் அமைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், கொழும்பு விமான நிலையத்தில் இருந்து பலாலி வழியாக சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. மேலும் பலாலியில் இருந்து தென்னிந்திய நகரங்களுக்கும், கொழும்புக்கும் விமானங்கள் இயக்கப்பட்டன.

1983-ல் இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கியபோது, இந்தியா மற்றும் கொழும்பில் இருந்து பலாலிக்கு விமானங்கள் இயக்கம் நிறுத்தப்பட்டன. 1990-ம் ஆண்டு பலாலி விமான தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிஉயர் பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்டு, அங்கு வசித்த மக்கள் இலங்கை ராணுவத்தால் வெளியேற்றப்பட்டனர். பலாலி விமான தளத்தை இலங்கை விமானப்படை பயன்படுத்தி வந்தது.

உள்நாட்டுப் போர் 2009-ல் முடிந்த பிறகு மகிந்த ராஜபக்ச ஆட்சியில் பலாலி விமான தளத்தை இந்திய நிதி உதவியுடன் விமான நிலையமாகப் புனரமைக்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன்பேரில் இந்தியா 2009 ஆகஸ்டில் முதற்கட்டமாக ரூ.5 கோடி (இந்திய ரூபாய் மதிப்பில்) வழங்கியது.

ஆனால் பலாலியில் ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 6,000 ஏக்கர் நிலத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களை மீண்டும் குடியேற்ற வலியுறுத்தி நீண்ட காலமாகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் புனரமைப்பு பணி தாமதமானது. இதைத் தொடர்ந்து, பலாலியைச் சுற்றி சுமார் 1,500 ஏக்கர் நிலத்தை ராணுவம் அண்மையில் விடுவித்தது.

இந்நிலையில், தமிழர்கள் அதிகம் வாழும் வடமாகாண வளர்ச்சிக்கு உதவும் நோக்குடன் யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுகத்தை மேம்படுத்தவும், பலாலி விமான தளத்தை விமான நிலையமாக மாற்றவும் சுமார் ரூ.300 கோடி வரை நிதி உதவி செய்ய இந்தியா உறுதி அளித்தது.

பலாலி விமான தளத்தை விமான நிலையமாகப் புனரமைப்பது தொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இடையிலான சந்திப்பு 22.7.2018 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அப்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பலாலி விமான தளத்தை இந்திய உதவியுடன் புனரமைக்கும் பணி டிசம்பரில் தொடங்கும் என்றார். ஆனால், இலங்கையில் நடந்த அரசியல் குழப்பத்தால் இத்திட்டம் தாமதம் ஆனது.

இந்நிலையில் பலாலி விமான தளத்தை விமான நிலையமாகப் புனரமைக்கும் பணியை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் பாலச்சந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சரவணபவன், சித்தார்த்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்பணி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெற்று பலாலியில் இருந்து சென்னை, திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x