

மேயராக இருந்தபோது சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.90 கோடியில் 10 பாலங்கள் கட்டப்பட்டன. அதில் ரூ.30 கோடி மிச்சப்படுத்திக் கொடுத்த என்னை ஊழல் வழக்கில் கைது செய்தார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை சைதாப்பேட்டையில் இன்று நடைபெற்ற திமுக விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:
“இதே சென்னை மாநகரத்தில் நானும் மேயராக இருந்திருக்கின்றேன். நம்முடைய மா.சுப்ரமணியமும் நகரத்தின் மேயராக இருந்திருக்கிறார். இன்றைக்கு போக்குவரத்து நெரிசல்களை நாம் பார்க்கின்றோம். திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு, நாம் புறப்படுகின்றோம் என்று சொன்னால், 4 கிலோமீட்டர் தொலைவில் செல்ல வேண்டிய இடத்திற்கு 4 மணி நேரம் முன்பாகவே புறப்பட வேண்டியதாக இருக்கின்றது.
அந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசல் பாதிக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், 1996-ம் ஆண்டு நான் மேயராகப் பொறுப்பேற்றதும், போக்குவரத்து நெரிசலை ஓரளவிற்கு கட்டுப்படுத்த வேண்டும், சமாளிக்க வேண்டும் என்று எண்ணினேன். எனவே, பல தெருக்கள் அனைத்தும் ஒன்றிணையும் இடங்களில் பாலங்கள் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து, 10 மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என்று அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, 10 மேம்பாலங்களைக் கட்டினோம்.
முதன் முதலில் தலைவர் கலைஞர் 1971-ம் ஆண்டு கட்டிய மேம்பாலம் தான் இன்றைக்கு இருக்கக்கூடிய அண்ணா மேம்பாலம். அந்த மேம்பாலம் இல்லை என்றால் இன்றைக்கு அந்த இடம் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
முன்பு கூறியது போல், 10 மேம்பாலங்களைக் கட்டியபோது கூட நம் மீது குறை சொன்னார்கள். அவ்வளவு ஏன் அதில் ஊழல் நடந்திருக்கின்றது என்று, என்னை, பொன்முடி, கோ.சி.மணி ஏன், தலைவர் கலைஞரைக் கைது செய்த கொடுமை எல்லாம் தெரியும் உங்களுக்கு. அதில் அரசியல் சாயம் பூசி பழிவாங்க வேண்டும் என்பதற்காக, கைது செய்து அன்றைக்கு வழக்குப் பதிவு செய்தார்கள்.
வழக்குப் பதிவு செய்து அதன்பிறகு 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அதிமுகவினரால் அந்தக் குற்றத்தை நிரூபிக்க முடிந்ததா என்று கூட நான் கேட்க மாட்டேன். அது தொடர்பாக ஒரு சார்ஜ் ஷீட்டாவது பதிவு செய்தார்களா என்றால் கிடையாது.
இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் ஒரு அரசின் சார்பில் இருக்கும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துற, மாநகராட்சி, கல்வித்துறை, போன்ற எந்தத் துறையாக இருந்தாலும் ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிதி ஒதுக்குகின்றோம். பெரும்பாலும் பார்த்தீர்களென்றால் நிதி ஒதுக்குவதை விட அதிகமாகத் தான் செலவாகும்.
அரசுத் துறையைப் பொறுத்த வரையில் அதனை மிச்சப்படுத்தி செலவு செய்ததாக வரலாறு கிடையாது. ஆனால், நான் மேயராக இருந்தபோது பத்து மேம்பாலங்கள் கட்டுவதற்கு, 90 கோடி ரூபாய் அளவிற்கு திட்டங்களைத் தீட்டி 60 கோடியில் முடித்து, 30 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுத்தேன். இதுதான் நம் வரலாறு''.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.