

மத்திய அரசுடன் 2-ம்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந் தால் வரும் 12-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் செய்வதாக வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு, வாரத்துக்கு 5 நாட்கள் பணி, ஓய்வூதியத்தை மாற்றியமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வரும் 12-ம் தேதி நாடு தழுவிய அளவில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மத்திய அரசுடன் நடைபெற்ற முதல்சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நாளை மறுநாள் (10-ம் தேதி) இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘எங்களது கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசின் தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையர் மித்ராவுடன் முதல்சுற்று பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து, வரும் திங்கள்கிழமை (10-ம் தேதி) இரண்டாம்சுற்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இதில் உடன் பாடு ஏற்படும் என நம்புகிறோம்.
உடன்பாடு ஏற்படாவிட்டால், ஏற்கெனவே திட்டமிட்டபடி 12-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள்’’ என்றார்.