Published : 01 Jul 2019 01:02 PM
Last Updated : 01 Jul 2019 01:02 PM

அரசுப்பள்ளிக்கு காரில் வரும் மாணவர்கள்; அங்கேயே படிக்கும் ஆசிரியரின் குழந்தைகள்- அசத்தும் களத்தூர் தொடக்கப்பள்ளி

அரசுப்பள்ளிக்கு காரில் வந்திறங்கும் மாணவர்கள்; அங்கேயே படிக்கும் ஆசிரியரின் குழந்தைகள் என திருச்சி மாவட்டத்தில் உள்ள களத்தூர் தொடக்கப்பள்ளி  அசத்தி வருகிறது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம் களத்தூர் தொடக்கப்பள்ளியில் தினந்தோறும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காரில் வந்திறங்குகின்றனர். இதுகுறித்துப் பேசுகிறார் அங்கு பணியாற்றும் ஆசிரியர் குருமூர்த்தி.

குறைவான மக்கள்தொகை கொண்ட எங்கள் ஊரில் ஒவ்வோர் ஆண்டும் ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 2 பேர், 3 பேர் என்ற அளவிலேயே இருந்து வந்தது. இந்த ஆண்டும் 1-ம் வகுப்பில் 2 பேர்தான் சேர்ந்தனர்.

அதனால் ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கையை 20-க்கும் குறையாமல் பார்த்துக்கொள்வதே பெரும் போராட்டமாக இருந்து வந்தது. இந்நிலையில் பள்ளியின் செயல்பாடுகளைப் பார்த்த சக்திவேல், முத்துவீரன் என்னும் இரு பெற்றோர்கள், அருகாமையிலுள்ள ஊர்களில் உள்ள பொதுமக்களிடம் பள்ளியின் செயல்பாடுகளை எடுத்துக் கூறியுள்ளனர். அவர்களும் ஆர்வத்துடன் எங்கள் பள்ளியில் தங்களது குழந்தைகளைச் சேர்த்தனர்.

அவர்களின் முயற்சியால் அருகிலுள்ள ஊர்களில் இருந்தும் தனியார் பள்ளிகளில் இருந்தும் இப்பள்ளியில் மாணவர்கள் சேர்ந்து படிக்கின்றனர். அதுவும் தமிழ்வழிக் கல்வியில் மாணவர்கள் இணைந்துள்ளனர்.

முத்துவீரனின் மகள்கள் எங்கள் பள்ளியில்  5-ம் வகுப்பு மற்றும் 3-ம் வகுப்பு படிக்கின்றனர். அவர், சொந்த காரிலேயே தனது இரு மகள்களையும் அவருடைய ஊரிலுள்ள 10 மாணவர்களையும் அழைத்து வருகிறார். இதனால் போன கல்வியாண்டில் 23 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை இந்த ஆண்டில் 43 ஆக உயர்ந்துள்ளது.

இதே பள்ளியில் என் மகன் 5-ம் வகுப்பிலும் மகள் 2-ம் வகுப்பிலும் படிக்கின்றனர். சிறு கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில்  மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்வது, எங்கள் மீதான மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. அதை எப்போதும் காப்பாற்றுவோம் என்கிறார் ஆசிரியர் குருமூர்த்தி.

*

அன்பாசிரியர் குருமூர்த்தி, கற்றலில் பின்தங்கியிருந்த அரசுப்பள்ளி ஒன்றை செயல்வழிக் கற்றலின் மூலம், மாவட்டத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக மாற்றியவர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அனைத்துப் பாடங்களையும் முழுமையான காணொலியாக மாற்றியவர். காணொலிக் குறுந்தகடுகளை தமிழகம் முழுக்கவுள்ள ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருபவர்.

அன்பாசிரியர் குருமூர்த்தி மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக வாசிக்க: அன்பாசிரியர் 4 - குருமூர்த்தி: யூடியூபில் களத்தூர் அரசு பள்ளியும் காணொலி வித்தகரும்!

க.சே. ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x