

தன் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக் கோரி மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தொடர்ந்த 8 வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 27-ம் தேதி முகிலன் காணாமல் போனதாக நடத்திய போராட்டம், கடந்த ஏப்ரல் மாதம் காவிரி விவகாரம் தொடர்பான போராட்டம், கடந்த மே மாதம் ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நடத்தும் போராட்டம் என தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தொடர்ந்து ஒரு சாதிக்கு எதிராகவும் மக்களிடத்தில் தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்ததாகவும், உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்றங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகப் பேசி வந்ததாகவும், அவர் மீது திருவல்லிக்கேணி, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி திருமுருகன் காந்தி சார்பில் தனித்தனியே 8 மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில் இந்த வழக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அவருடைய பேச்சுகளையும் நடவடிக்கைகளையும் பார்க்கும் பொழுது அவர் மீது காவல்துறை வழக்கு தொடர அனைத்து முகாந்திரமும் இருப்பதாகவும், அவர் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அவர் பின்னால் இருந்து யாரும் இருக்கிறார்களா என முழுமையாக விசாரணை நடத்தவேண்டும் எனவும் தெரிவித்து அனைத்து வழக்குகளையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்