Published : 20 Nov 2014 08:32 AM
Last Updated : 20 Nov 2014 08:32 AM

மின் கட்டண உயர்வு தாமதத்தால் ரூ.1,000 கோடி நஷ்டம் அதிகரிக்க வாய்ப்பு: நவம்பர் இறுதிக்குள் அறிவிப்பை வெளியிட தீவிரம்

மின் கட்டண உயர்வு அறிவிப்பு தாமதமானதால், மின் வாரியத்துக்கு திட்டமிட்டதை விட 1,000 கோடி ரூபாய் வரை நஷ்டம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க வரும் 30ம் தேதிக்குள் மின் கட்டண உயர்வு அறிவிப்பை வெளியிட மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தமிழக மின்சார வாரியத்தின் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தானாக முன் வந்து உத்தேச கட்டண உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 23ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தற்போதைய கட்டணத்தை விட 21 சதவீதம் சராசரியாக உயர்த்துவதற்கு ஒழுங்குமுறை ஆணையம் உத்தேசித்து பட்டியல் வெளியிட்டது. ஆனால், இந்த அறிவிப்புக்கு மின் நுகர்வோர் மற்றும் தொழிற்துறையினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

மேலும் மின் கட்டண உயர்வு நடவடிக்கைகளில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உரிய சட்ட நடவடிக்கைகளை பின்பற்றவில்லை. ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் பதவி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, ஆணையத் தலைவர் இந்த மனுவை விசாரிக்க முடியாது. மேலும் மின்சார வாரியம் முறைப்படி ஆண்டு வருவாய், செலவுத் தேவைக் கணக்கை ஒழுங்குமுறை ஆணையத்தில் சமர்ப்பித்து, பொதுமக்கள் பார்வைக்கு அளிக்கவில்லை என பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, மின் வாரியம், ஒழுங்குமுறை ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை டிசம்பர் 18க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வழக்கின் காரணமாகவும், மக்களின் கடுமையான எதிர்ப்பாலும் மின் கட்டண உயர்வுக்கான முறையான உத்தரவை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தாமதப்படுத்தியுள்ளது. இதனால் மின் வாரியத்துக்கான நஷ்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவின்படி, நடப்பு ஆண்டுக்கான வரவு, செலவு விவரங்களை மின் வாரியத்திலிருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நடப்பு நிதியாண்டின் வருவாய்த் தேவை 39 ஆயிரத்து 92 கோடி ரூபாயாகும். ஆனால் தற்போதைய மின் கட்டண வசூலின் படி, 32 ஆயிரத்து 238 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

தமிழக அரசின் மானியமும் இந்த வருவாய்க்குள் அடங்கும் என்பதால், 6,854 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தத் தொகை நஷ்டத்தின் அளவை கூட்டி விடும் என்பதால், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண உயர்வு நடவடிக்கையை மேற்கொண்டது.

மின் கட்டண உயர்வு நவம்பர் முதல் அமலுக்கு வந்திருந்தால், நடப்பு ஆண்டின் வருவாய்ப் பற்றாக்குறை 3,427 கோடி ரூபாயாக குறைந்திருக்கும். ஆனால், பல பிரச்சினைகளால், மின் கட்டண உயர்வு அறிவிப்பு தாமதமாவதால், நடப்பு ஆண்டின் வருவாய்ப் பற்றாக்குறை கூடிக் கொண்டே செல்கிறது. அறிவிப்பு தாமதமாகும் ஒவ்வொரு மாதமும் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு மட்டும் சுமார் 570 கோடி ரூபாய் நஷ்டம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் திட்ட மிட்டதை விட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகிய வற்றுக்கும் சேர்த்து, 1,000 கோடி கூடுதலாக வருவாய்ப் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, நடப்பு நிதியாண்டில் வரும் மார்ச் வரையுள்ள நான்கு மாதங்களுக்காவது நஷ்டம் ஏற்படாமல் இருக்க, விரைவில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x