Last Updated : 04 Jul, 2019 11:26 AM

 

Published : 04 Jul 2019 11:26 AM
Last Updated : 04 Jul 2019 11:26 AM

சேலத்தில் நகைக் கடை மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் தங்க நகைகள் கொள்ளை

சேலத்தில் நகைக் கடை மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் தங்க நகைகள், இரண்டு கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

சேலம் அரிசிபாளையம் சுளுக்கு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். சேலத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் காசாளராகப் பணிபுரிந்து வரும் இவருக்கு, திவ்யலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

திவ்யலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சுமார் மூன்று மணியளவில், அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, வீட்டைப் பூட்டி விட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு மனைவியை அழைத்து சென்றுள்ளார் ரமேஷ். அங்கு மனைவியை அனுமதித்து விட்டு, சுமார் ஐந்து மணியளவில் வீட்டிற்குத் திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த பொருட்கள் கலைக்கப்பட்டு இருந்ததும், தங்க நகைகள் மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதையும் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மருத்துவமனைக்குச் சென்ற இரண்டு மணிநேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த சுமார் 25 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் பணம், சுமார் 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், அதிகாலை நேரத்தில் இரண்டு மணிநேரத்திற்குள் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x