Last Updated : 01 Jul, 2019 03:53 PM

 

Published : 01 Jul 2019 03:53 PM
Last Updated : 01 Jul 2019 03:53 PM

சென்னை தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மக்களுடைய கருத்தையே பகிர்ந்தேன்: கிரண்பேடி விளக்கம்

சென்னை தண்ணீர் பிரச்சினை பற்றி நான் கூறியது மக்களுடைய கருத்து என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை மாநகரம் வறட்சியில் சிக்கித் தவிப்பதற்கு மோசமான நிர்வாகமும், ஊழல் அரசியலுமே காரணம் என்று தமிழக அரசை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடுமையாக சாடி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சமூக வலைதளத்தில் கருத்துப் பதிவு செய்திருந்தார். மேலும், தமிழக மக்களையும் அவர் விமர்சித்திருந்தார்.

கிரண்பேடியின் இந்தக் கருத்து அரசியல் கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக சட்டப்பேரவையில் கிரண்பேடியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பேசியதோடு மட்டுமின்றி, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்தார். மேலும், குடியரசுத் தலைவர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியிலும் கிரண்பேடியைக் கண்டித்து திமுக சார்பில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இணைந்து ஆளுநர் மாளிகை அருகே நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது வாட்ஸ் அப்பில் இதுதொடர்பாக தெரிவித்த விளக்கம்:

''அரசியல் கட்சியொன்று போராட்டம் நடத்த உள்ளதாக அறிந்தேன். எனது கருத்து மக்களின் பார்வையில் கேள்வி, பதில் அடிப்படையில் பதிவிட்டிருந்தேன். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கவே நான் 'மக்களின் கருத்தை' பகிர்ந்தேன். இது மக்களின் பார்வை.

எனவே, இதில் தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை. தயவு செய்து இவ்விஷயத்தைப் பாராட்டுங்கள். இது எப்போதும் நிர்வாகத்தை அறிய உதவுகிறது. அரசாங்கம் மக்களுக்குச் சேவை செய்வதோடு அவர்களின் துன்பங்களை நிவர்த்தி செய்வதும் அவசியம்''.

இவ்வாறு கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x