

திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு திமுக தலைமை புதிய பொறுப்பை வழங்கியுள்ளது.
திமுக இளைஞரணிச் செயலாளராக 32 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த ஸ்டாலின் திமுக தலைவராக ஆகும் நிலையில் இளைஞரணிச் செயலாளராக கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டார்.
திருப்பூர் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட வெள்ளக்கோவில் சாமிநாதன். 2006 தேர்தலில் வெள்ளக்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அப்போது திமுக அமைச்சரவையில் நெடுஞ்சாலை மற்றும் பராமரிப்புத்துறை அமைச்சராக இருந்தார்.
ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்தபோது, மாநில இளைஞரணி துணைச் செயலாளராகப் பதவி வகித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இளைஞரணியின் செயலாளராக வெள்ளக்கோவில் சாமிநாதன் பதவி வகித்து வந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினை இளைஞரணிச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்று பலரும் பரிந்துரைத்து கடிதம், தீர்மானம் நிறைவேற்றி அதையும் அனுப்பினர்.
இதையடுத்து தான் பதவி விலகுவதாக வெள்ளக்கோவில் சாமிநாதன் கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று அவரை விடுவித்து உதயநிதி ஸ்டாலினை இளைஞரணிச் செயலாளராக நியமித்து அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட அவருக்கு திமுகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.