Published : 12 Jul 2019 02:28 PM
Last Updated : 12 Jul 2019 02:28 PM

கர்நாடக அணைகளில் நீர்ப்பெருக்கு: காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்; ராமதாஸ்

கர்நாடக அணைகளில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளின் நீர்மட்டம் கடந்த சில நாட்களில் மட்டும் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் அதில் உச்ச நீதிமன்றம் செய்த திருத்தங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் ஜூன் மாதம் 9.19 டிஎம்சி, ஜூலை மாதம் 31.24 டிஎம்சி என மொத்தம் 40.43 டிஎம்சி தண்ணீரை வழங்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி ஆணையிட்டது.

ஆனால், கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லாததை காரணம் காட்டி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வந்தது. அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தவுடன், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று கர்நாடக அரசு கூறியிருந்தது.

ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் கர்நாடகத்திற்கு குறிப்பிடத்தக்க அளவில் பயன் கிடைக்காத நிலையில், இப்போது தான் கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதனால் கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், ஹாரங்கி, ஹேமாவதி, கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, அதிகபட்சமாக ஹேமாவதி அணைக்கு விநாடிக்கு 11,289 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கபினி அணைக்கு விநாடிக்கு 6,161 கனஅடி, கிருஷ்ணராஜசாகர் அணைக்கு விநாடிக்கு 6,698 கனஅடி,  ஹாரங்கி அணைக்கு விநாடிக்கு 1,818 கனஅடி மொத்தமுள்ள 4 அணைகளிலும் சேர்த்து விநாடிக்கு 27,966 கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள 4 அணைகளில் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் 9.88 டிஎம்சி, ஹேமாவதி அணையில் 9.65 டிஎம்சி, கபினியில் 6.35 டிஎம்சி, ஹாரங்கியில் 1.89 டிஎம்சி, என மொத்தம் 27.77 டிஎம்சி தண்ணீர் இருந்தது. இன்று காலை நிலவரப்படி இது 30 டிஎம்சியை தாண்டியிருக்கலாம்.

ஒப்பீட்டளவில் இது தமிழகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கு தாராளமான தண்ணீர் ஆகும். ஆனால், தமிழகத்திற்கு இன்று காலை வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட திறக்கப்படவில்லை. கர்நாடகத்தின் குடிநீர் தேவைக்கு மட்டும் 4 அணைகளில் இருந்தும் விநாடிக்கு 1134 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

நீர் ஆண்டின் தொடக்கமான ஜூன் மாதம் இன்று வரையிலான 41 நாட்களில் கர்நாடக அணைகளுக்கு 19 டிஎம்சிக்கும் கூடுதலான தண்ணீர் வந்துள்ளது. ஆனால், இதே காலத்தில் தமிழகத்திற்கு கர்நாடகம் வெறும் 3 டிஎம்சி தண்ணீரை மட்டும் தான் திறந்து விட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் நியாயமல்ல.

இது நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்பை மட்டுமின்றி, காவிரி மேலாண்மை ஆணையத் தீர்ப்பையும் அவமதிக்கும் செயலாகும். இதை காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதிக்கக்கூடாது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசும்போது தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆணையம் மூலம் ஏற்பாடு செய்யும்படி ஆணையிட்டு இருந்ததாக கூறியிருந்தார். அது முழுக்க முழுக்க ஏமாற்று வேலையாகும். தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்கெனவே ஆணையிட்டிருக்கும் நிலையில், கர்நாடக அரசே எந்த நேரத்திலும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீரை திறந்து விட முடியும்.

அதை செய்யாமல் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மேலாண்மை ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்கும்படி கூறுவது, போகாத ஊருக்கு வழி காட்டும் செயலாகும். தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்காமல் ஏமாற்ற புதுப்புது வழிகளில் கர்நாடக அரசு முயல்வதையே முதல்வர் குமாரசாமியின் செயல்கள் காட்டுகின்றன.

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடத் தேவையான அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் உள்ளது. எனவே, மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி தமிழகத்தில் காவிரியில் தினமும் குறைந்தது ஒரு டிஎம்சி அளவுக்காவது தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முன்வர வேண்டும்", என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x