Published : 06 Jul 2019 05:08 PM
Last Updated : 06 Jul 2019 05:08 PM

தண்ணீர் பஞ்சம்; முன்கூட்டியே அறிஞர்கள், ஊடகங்கள், அதிகாரிகள் எச்சரித்தும் அசையாத அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

தண்ணீர் பிரச்சினை குறித்து பல மாதங்களுக்கு முன்பு பத்திரிகைகள் ஆய்வுக்கட்டுரைகளை தீட்டி இருக்கின்றது. சில விஞ்ஞானிகள் வெளிப்படையாக சொல்லி அரசையும் எச்சரித்திருக்கிறார்கள். அதிகாரிகளும் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கின்றார்கள் ஆனாலும் அரசு கண்டுக்கொள்ளாததாலேயே இந்த நிலை என ஸ்டாலின் பேசினார்.

மு.க.ஸ்டாலின் சென்னை சைதை தொகுதியில், ஆயிரம் இடங்களில் மழை நீர் சேகரிக்கும் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு பேசியதாவது:

“ஒரு அருமையான திட்டம் இந்தத் திட்டம் மழைநீரை சேகரித்து, குடிநீர் பிரச்சினையாக இருந்தாலும் தண்ணீர் பிரச்சினையாக இருந்தாலும், அவைகள் எல்லாம் வரக்கூடிய சூழ்நிலைகளில் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த திட்டம் நிச்சயமாக பயன்படப் போகின்றது.

நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்ற நேரத்தில், ஒரு ஆச்சரியத்தோடும் அதிசயத்தோடும் பங்கேற்க வந்திருக்கின்றேன். அது என்னவென்று கேட்டால், ஆட்சிப் பொறுப்பில் இருந்து, அரசை நடத்திக் கொண்டிருக்கக்கூடியவர்கள் தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

இவற்றையெல்லாம் யார் செய்ய வேண்டும் என்று கேட்டீர்களேயானால், ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் தான் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்யாத காரணத்தினால், அதனைப் பற்றி கவலைப்படாத காரணத்தினால், திமுக இதை நடத்துகிறது, மக்களுக்கு பணியாற்றுவதில் என்றைக்கும் தி.மு.க பின்வாங்காது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் இந்த நிகழ்ச்சி.

மா.சுப்ரமணியம் சொன்னார், நாம் நட்டுவைத்த மரங்கள் அனைத்தும் இன்றைக்கு சைதை தொகுதியை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது என்று. ஒரு திருத்தம், என்னவென்றால் அலங்கரிப்பது மட்டுமல்ல இந்தத் தொகுதியில் இருக்கக்கூடிய மக்களை காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அதுதான் உண்மை.

அதனால்தான் 1 மரத்தை நாம் எடுக்கின்ற நேரத்தில் அந்தப் பகுதியில் அதற்கு பதிலாக 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற, பிரச்சாரத்தை தொடர்ந்து நாம் முழங்கிக் கொண்டு இருக்கின்றோம்.

அதனை யார் செய்கின்றார்களோ, செய்யவில்லையோ, ஆனால் சைதை பகுதியில் இருக்கக்கூடிய சட்டப்பேரவை உறுப்பினர் நம்முடைய மாவட்ட செயலாளர் மா.சுப்ரமணியம் அவர்கள் அதனை முறையாக செய்து கொண்டிருக்கின்றார். மழை நீர் பிரச்சினை இன்றைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை சிந்தித்துப் பார்த்தீர்கள் என்றால், தண்ணீர் பஞ்சம் இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது.

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் நாம் அவதிப்படக்கூடிய நிலை, சென்னை மாநகர மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களின் நிலை இன்றைக்கு குடங்களை தூக்கிக்கொண்டு தாய்மார்கள் அலைந்து கொண்டிருக்கக்கூடிய அந்தக் காட்சிகளைப் பார்க்கின்றோம்.

மறியல்கள், போராட்டங்கள் போன்றவை செய்யக்கூடிய அனைத்தையும் பார்க்கின்றோம். இந்தக் குடிநீருக்காக நம்முடைய ஆட்சிப்பொறுப்பில் தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபொழுது மிகுந்த அளவிற்கு முக்கியத்துவம் தந்து பல திட்டங்களை எல்லாம் கொண்டு வந்திருக்கின்றார்.

இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அரசைப் பொறுத்தவரையில் இன்றைக்கு ‘குடிநீர் வடிகால் வாரியம்’ என்று ஒரு வாரியம் இருக்கின்றது என்றால், அது அவர் முதல்வராக இருந்த பொழுது முதன் முதலாக அதனை உருவாக்கித் தந்தார்.

 நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவன் என்பது உங்களுக்குத் தெரியும். தலைவர் கலைஞர் அவர்கள் 5-வது முறையாக முதலமைச்சராக இருந்த நேரத்தில், அந்த அமைச்சரவையில் குடிநீரை பேணிப் பாதுகாக்கக்கூடிய துறை உள்ளாட்சி துறை, அந்தத் துறையை பொறுப்பேற்று பணியாற்றக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன் பிறகு, துணை முதலமைச்சராகவும் நான் இருந்திருக்கின்றேன்.

பொறுப்பில் இருந்த பொழுது தலைவர் அவர்கள் குடிநீர் தட்டுப்பாடு - தண்ணீர் பிரச்சினை - தண்ணீர் பஞ்சம் ஏற்படக்கூடிய கோடைகாலம் வருகின்ற நேரத்தில், முன்கூட்டியே அதற்கான திட்டமிடல்களை செய்வார். இப்பொழுது கூட தண்ணீர் பஞ்சம் போன்றதொரு இப்படியொரு நிலை வரப்போகிறது என்று ஏறக்குறைய ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு பல பத்திரிகைகள் கட்டுரைகள் எழுதி இருக்கின்றது.

ஆய்வுக்கட்டுரைகளை தீட்டி இருக்கின்றது. சில விஞ்ஞானிகள் இவற்றையெல்லாம் கண்டறிந்து வெளிப்படையாக சொல்லி இருக்கின்றார்கள் அரசையும் எச்சரித்திருக்கிறார்கள். இதற்கென்று இருக்கக்கூடிய அதிகாரிகளும் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கின்றார்கள்.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இது குறித்து நான் பேசுகின்ற பொழுது சென்னைக்கு குடிநீர் வழங்கும் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய ஏரிகள் அனைத்தும் வற்றிக் கொண்டிருக்கின்றது. தண்ணீரின் அளவு குறைந்து கொண்டிருக்கின்றது என்று ஆதாரத்தோடு செய்திகளை எல்லாம் நான் சட்டமன்றத்தில் பேசி இருக்கின்றேன்.

ஆனால், அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு எடுத்திருந்தால் நிச்சயமாக இந்த நிலை வந்திருக்காது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை.

அதனால்தான், நாம் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு நம் அமைப்பின் சார்பிலும், கட்சியின் சார்பிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் தூர் எடுக்காமல், குப்பைகளை கொட்டி வைத்திருக்கக்கூடிய அந்த சூழ்நிலையில் இருக்கும் ஏரிகளை குளங்களைத் தூய்மைப்படுத்தி தூர்வாரி மழைக்காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை வரும் என்ற நிலை அறிந்து அந்தப் பணியை நாம் துவங்கினோம்.

மிகச் சிறப்பாக அந்த பணிகளை நாம் செய்து முடித்திருக்கின்றோம். இதே தொகுதியில் கூட அந்தப் பணிகளை பல இடங்களில் செய்திருக்கின்றோம். நானும் நேரடியாக பார்த்து இருக்கின்றேன். மக்களின் பயன்பாட்டிற்காக பல இடங்களில் நானே அந்த பணிகளை துவங்கி வைத்திருக்கின்றேன். இவற்றையெல்லாம் நாம் ஆட்சியில் இல்லாத நேரத்திலும் செய்து இருக்கின்றோம்”  இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x