Published : 08 Jul 2019 02:09 PM
Last Updated : 08 Jul 2019 02:09 PM

பள்ளி மாணவர் பாதுகாப்புக்காக அனைத்துப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை மேம்பாட்டுக்கான திட்டங்களை சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு:

“மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் தரமான கல்வியைப் பெறும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள சில புதிய திட்டங்கள் குறித்து நான் இங்கே அறிவிக்க விரும்புகிறேன்.

1. அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, நடப்பாண்டில் 124 கூடுதல் வகுப்பறைகள், 83 அறிவியல் ஆய்வகங்கள், 85 நூலக அறைகள், 84 கலை மற்றும் கைவினை அறைகள், 50 கணினி அறைகள், 92 மாணவர்களுக்கான கழிப்பறைகள், 104 மாணவியர் கழிப்பறைகளைப் புதிதாக கட்டுதல், 1,475 மாணவர் கழிப்பறைகளையும், 1,849 மாணவியர் கழிப்பறைகளையும் பழுது பார்த்தல்.

149 பள்ளிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்துதல், 132 பள்ளிகளுக்கு 4,493 மீட்டார் நீளமுள்ள சுற்றுச் சுவர் எழுப்புதல், 1,649 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கழிப்பறைகள் அமைத்தல், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கென கைப்பிடியுடன் கூடிய 5,726 சாய்வு தளங்கள் அமைத்தல் மற்றும் 156 பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளைப் பழுது பார்த்தல் ஆகிய பணிகள் 163 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

2. இந்தியாவின் அறிவுசார் மையமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜெயலலிதா “தொலைநோக்கு பார்வை 2023”-ஐ வெளியிட்டார்கள். காலத்திற்கேற்ப மாற்றங்களைப் புகுத்தி, 12-ம் வகுப்பு வரையிலான கலைத் திட்டம் மற்றும் பாடத் திட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. திருத்தியமைக்கப்பட்ட பாடத் திட்டம் மற்றும் கலைத்திட்டத்தின்படி 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் 2019-20 ஆம் கல்வியாண்டின் பயன்பாட்டிற்கென அரசால் தயாரிக்கப்பட்டுள்ளது.

பாடப் பொருள் சார்ந்த கூடுதல் தகவல்கள், மாணவர் செயல்பாடுகள், படங்கள், மதிப்பீடு மற்றும் தகவல் தொழில்நுட்பப் பகுதிகள் போன்றவை உள்ளீடு செய்யப்பட்டு, செறிவூட்டப்பட்ட பாடப் புத்தகங்களாக இப்புத்தகங்கள் விளங்குகின்றன. இப்புத்தகங்களை ஆசிரியர்கள் சீரிய முறையில் பயன்படுத்தவும், அதன் மூலம் மாணவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்திடவும், கற்றல் விளைவுகளை ஆய்வு செய்து, கற்றலில் உள்ள கடினமான பகுதிகளைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு, வகுப்பறைச் செயல்பாடுகளை மேம்படுத்திட, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவி புரியும் வகையில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 61 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.

3. மாணவ, மாணவியரின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள அரசு, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவியரின் பாதுகாப்பினை உறுதி செய்ய, 2,650 அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 244 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளி ஒன்றிற்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம் 21 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) வசதி அமைத்துத் தரும். இத்திட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகள், மாணவியர் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் உள்ள பள்ளிகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

4. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா காலணிகள் வழங்கும் திட்டம் இவ்வரசால், 2012-13 கல்வியாண்டு முதல் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் காலணிகளுக்குப் பதிலாக, 2020-21 ஆம் கல்வியாண்டு முதல் ஷூ மற்றும் சாக்ஸ்  10 கோடியே 2 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் வழங்கப்படும்.

இதனால் 28 லட்சத்து 64 ஆயிரத்து 885 மாணவ, மாணவியர் பயன் பெறுவர் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக் கல்வித் துறை மூலம் இவ்வரசு செயல்படுத்த இருக்கும் இந்தத் திட்டங்களால், பள்ளி மாணவ, மாணவியர், உரிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளிகளில், மிகவும் உகந்த சூழலில், தரமான கல்வி கற்க வழி வகுக்கும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர் கல்வித் துறை

1. தமிழ்நாட்டில் உள்ள 112 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை தேசிய தர மதிப்பீட்டுச் சான்றிதழ் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த தேசிய தர மதிப்பீட்டுச் சான்றிதழ் பெறும் வகையில், மேலும் 10 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 54 கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

2. 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்லூரிக் கல்வி இயக்ககம், 54 வருடங்களாக தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்குச் சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த இயக்ககத்திற்கு தனியானதொரு கட்டடம் ஏற்படுத்திக் கொடுத்து, மின் ஆளுமை, கல்வி சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றை முழுமையாக நிறைவேற்ற ஏதுவாக கல்லூரிக் கல்வி இயக்ககத்திற்கான நிர்வாக கட்டிடத்துடன், சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககத்திற்கான அலுவலக கட்டிடமும் சேர்த்து 3,534 சதுர மீட்டர் பரப்பளவில் 10 கோடி ரூபாய் செலவில் சென்னை, சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் கட்டப்படும்.

3. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ராஜூஸ் கல்லூரி ஆகியவற்றை முன்மாதிரிக் கல்லூரிகளாக மேம்படுத்தி, அதில் புதிதாக இளங்கலை, முதுகலை பாடப் பிரிவுகள் தோற்றுவித்தல், புதிதாக வகுப்பறைகள் கட்டுதல், இருக்கும் வகுப்பறைகளை புதுப்பித்தல், புதிய ஆய்வுக்கூடம் கட்டுதல், ஆய்வுக்கூடத்தை புதுப்பித்தல், கணினிமயமாக்கப்பட்ட நவீன நூலகம் அமைத்தல், புதிய கருத்தரங்கம் கட்டுதல் மற்றும் வளாக மேம்பாடு ஆகிய பணிகள் தலா 4 கோடி ரூபாய் வீதம் 8 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

4. கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 98 அரசு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் 92 அரசுக் கல்லூரிகள் சொந்தக் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. இந்த 92 அரசுக் கல்லூரிகளுக்கு தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சிறப்பு மானியமாக ஆண்டொன்றிற்கு 58 கோடி ரூபாய் வீதம் 2 ஆண்டுகளுக்கு 116 கோடி ரூபாய் வழங்கப்படும். இதன் மூலம், சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாணாக்கர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி சூழல்கள் வெகுவாக மேம்படுத்தப்படும்.

5. கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 10 வகுப்பறை கட்டிடங்கள், கருத்தரங்கு கூடம் மற்றும் பொது கருவிமயமாக்கல் ஆய்வுக் கூடம், சுற்றுச்சுவர், துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், நிதி அலுவலர் மற்றும் கல்விசார் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

6. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகளை உலக தரத்திற்கு மேம்படுத்த அதிநவீன உபகரணங்களுடன் கூடிய ஒரு மையம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

7. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பல்கலைக்கழக அறிவியல் கருவிமயமாக்கல் மையம் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்”

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x