

மக்களவைத் தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்காததால்தான் இரண்டாம், மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கட்சி பதிவு செய்யும் முயற்சியில் இருப்பதால்தான் தேர்தலில் போட்டியிடவில்லை. அங்கீகாரம் பெற்ற கட்சி சின்னம் கிடைத்த பின்புதான் தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு.
எங்களது தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதியான வேராக என்னுடன் இருக்கின்றனர். உடனடியாக எம்.எல்.ஏ. பதவி கிடைக்கும் என்று நினைத்து வந்தவர்கள்தான் எங்களைப் பிரிந்து சென்றுள்ளனர்.
மற்ற மாநிலங்களில் நடக்கும் பிரச்சினைகளில் பாஜகவின் தலையீடு உள்ளது. தமிழக அரசு தண்ணீர் பிரச்சினையை சரியாக கையாளவில்லை என மக்கள் கருதுகின்றனர். தண்ணீரபஞ்சம் என்றாலே அமைச்சர் கோபப்படுகிறார்.
குடிநீர் விஷயத்தை அரசு கவனமாக கையாண்டு தட்டுப்பாட்டை போக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்காததால்தான் இரண்டாம் ,மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டோம் " என்று தெரிவித்தார்.