Published : 09 Jul 2019 09:28 AM
Last Updated : 09 Jul 2019 09:28 AM

வசதியற்றவர்களுக்கு குடிநீர் கிடைக்காதா?- வெளிநாட்டு நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்!

பாரம்பரியம் மிக்க கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகப் பணிகளை, வெளிநாட்டு நிறுவனத்தால் மட்டும்தான் மேற்கொள்ள முடியுமா? வசதியற்றவர்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை உருவாகுமா" என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார்.

கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யும் பணியை சூயஸ் என்ற பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க, ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது மாநகராட்சி நிர்வாகம். இது தொடர்பாக பல கேள்விகளை எழுப்புகிறார் மயூரா ஜெயக்குமார். அவரிடம் பேசினோம்.

"கோவை மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் மற்றும் மேலாண்மைப் பணிகளுக்காக, சூயஸ் என்ற பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, முதலில் 60 வார்டுகளுக்கு மட்டும் சூயஸ் மூலம் குடிநீர் விநியோகம் என்று கூறி, பணிகளை மேற்கொண்டு வருகிறது.

1973-ல் கோவையின் குடிநீர்த் தேவைகளுக்காக, தமிழக-கேரள அரசுகள் இணைந்து உருவாக்கிய சிறுவாணி குடிநீர்த் திட்டமும், 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பில்லூர்-அத்திக்கடவு குடிநீர்த் திட்டங்களால் கோவையின் குடிநீர் விநியோகம் தற்சார்பு அடைந்துள்ளது.

இந்த நிலையில், குடிநீர் விநியோகம் மற்றும் மேலாண்மைப் பணிகளுக்காக,  400 மில்லியன் யூரா (இந்திய மதிப்பில் ரூ.3,200 கோடி) மதிப்பில் 26 ஆண்டுகள் குத்தகைக்கு, ஓர் அந்நிய நாட்டு நிறுவனத்துடன் எதற்காக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்? சுமார் 1.50 லட்சம் குடிநீர் இணைப்புகளுக்கு, இவ்வளவு பெரிய தொகைக்கான டென்டரைக் கையாள இந்தியாவில் நிறுவனங்களே இல்லையா? மேலும், மீதமுள்ள 1.20 லட்சம் இணைப்புகளுக்கு யார் குடிநீர் இணைப்பு வழங்குவார்கள்? இந்த 1.20 லட்சம் இணைப்புகளுக்கு, 90 ஆண்டுகள் விநியோக அனுபவம் பெற்ற மாநகராட்சியே குடிநீர் விநியோக சேவை வழங்கும்போது, 1.50 லட்சம் இணைப்புகளுக்கான விநியோகத்தை மட்டும் குத்தகைக்கு விடுவது ஏன்?

எல்லோருக்கும் கிடைக்குமா குடிநீர்?

தற்போது வாரத்துக்கு ஒருமுறை, சுமார் 6 மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகிக்கும் அளவுக்குத்தான் குடிநீர் ஆதாரம் உள்ளது. இதில், 1.50 லட்சம் இணைப்புகளுக்கு மட்டும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கப் போவதாக கூறுகிறார்கள். அப்படியானால் மீதமுள்ள 1.20 லட்சம் இணைப்புகளுக்கும், பல்லடம், சுல்தான்பேட்டை வரையிலான 500-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் எவ்வாறு தண்ணீர் விநியோகிக்கப் போகிறார்கள்?  ஒரு திட்டத்தின் கீழ் உள்ள இணைப்புகளுக்கு பாகுபாடு அடிப்படையில் குடிநீர் விநியோகம் செய்வது எப்படி சரியாக இருக்கும்?

இதனால், 24 மணி நேரமும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்கும் பகுதிகளில், அதிக கட்டணம் வசூலிக்கப் போகிறார்கள் என்பது உறுதியாகிறது. மேலும், இந்த திட்டத்தில் சேர்க்கப்படாத வார்டு மக்கள், தங்களுக்குப் போதுமான அளவுக்கு குடிநீர் கிடைக்காவிட்டால், அதிக கட்டணம் செலுத்தும் திட்டத்தில் இணைய வேண்டியது அவசியமாகிவிடும். வசதியில்லாதவர்கள் நீரின்றிப் பரிதவிக்கும் நிலை உருவாகும்.

மேலும், தனியார் நிறுவனத்தினர் சுத்திகரிப்பு செய்யாமல் நீரை வெளியேற்றி, நீர்நிலைகளை மாசுபடுத்திவிடுவார்கள். பல்வேறு நாடுகளிலும் சூயஸ் நிறுவனம் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. பொலிவியாவில் மக்கள் போராட்டம் காரணமாக, இந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மழை பொய்த்தால் என்னவாகும்?

மேலும், சூயஸ் நிறுவனம் விநியோகிக்க வேண்டிய நீராதாரத்தை மாநகராட்சிதான் ஏற்பாடு செய்ய வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை பொய்த்து, நீராதாராம் வறண்டுபோனால், சூயஸ் நிறுவனம் மாநகராட்சியை கைகாட்டிவிட்டுப் போய்விடும். மேலும், கட்டுமான செலவுகளையும் மாநகராட்சியே ஏற்றுக்கொள்ளும் என்ற நிலையில், வெறும் விநியோகப் பணிக்கு மட்டும் எதற்காக வெளிநாட்டு தனியார் நிறுவனத்தை நியமிக்க வேண்டும்.

இதுதவிர, 5 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் திட்ட செலவுகள் இறுதிப்படுத்தப்படும் என்ற ஷரத்தின்படி, மேற்படி ரூ.3,200 கோடிக்கும் அதிகமாக செலவளிக்க வேண்டியிருக்கும். இந்த ஒப்பந்தத்தின்மூலம் மாநகராட்சியையும், மக்களையும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு அந்நிய நிறுவனத்திடம் அடகு வைக்கப்போகிறதா மாநகராட்சி நிர்வாகம்?

பல்வேறு நாடுகளிலும் அந்த நிறுவனத்தால் ஒப்பந்தத்தை சரியாக நடைமுறைப்படுத்த இயலாமல், ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வருங்காலத்தில் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை மனதில்கொண்டு, சூயஸ் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் ரத்து செய்ய வேண்டும். மக்கள் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முயன்றால், மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x