Published : 08 Jul 2019 08:53 PM
Last Updated : 08 Jul 2019 08:53 PM

என் மீது வசை வீசியவர்களைப் பழிவாங்க விரும்பவில்லை: வைரமுத்து பேச்சு

என் மீது வசை வீசியவர்கள், பழி போட்டவர்கள், ஒடுக்கப் பார்த்தவர்கள், அடக்கப் பார்த்தவர்கள் என அனைவரையும் ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்கிறேன். அவர்கள் மீது எந்தப் பழியுமில்லை. அவர்களைப் பழிவாங்க விரும்பவில்லை என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.

தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளை ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார்.

தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், ஆண்டாள், திருமூலர். வள்ளலார், உ.வே.சாமிநாத ஐயர், பாரதியார், பாரதிதாசன், கலைஞர் உள்ளிட்ட பலரைப் பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அரங்கேற்றினார். தற்போது அந்த ஆய்வுக் கட்டுரைகளின் ஒட்டுமொத்த தொகுப்பான 'தமிழாற்றுப்படை' என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் ஜுலை 12-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் வைரமுத்து. அப்போது அவர் பேசியதாவது:

''திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையேற்று நூலை வெளியிட, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொள்கிறார். ஒரே நேரத்தில் புத்தகமாகவும், ஒலி வடிவத்திலும் வெளியிடவுள்ளோம். 360 பக்கங்களையும் நானே வாசித்து ஒலி வடிவம் கொடுத்துள்ளேன். அந்த ஒலி வடிவத்தில் ஒரு சிறு இசையும் பின்னணியில் இருக்கும். மொத்த 12 மணி நேரம் கொண்ட ஒலி வடிவத்துக்கு இந்த தமிழ் உலகம் ஆதரவு தரும் என்று நம்புகிறேன். இந்த ஒலி வடிவத்தை அதே மேடையில் வைகோ வெளியிட, ஓய்வு பெற்ற நீதிபதி விமலா பெற்றுக் கொள்கிறார்.

எனது 17 நூல்களை வெளியிட்டவர் கலைஞர். அவர் வெளியிட்ட அந்த நாட்களை எல்லாம் நினைத்துப் பார்க்கிற போது, அந்த நிகழ்வு திரும்ப வருமா என்ற ஏக்கம் இருக்கிறது. எத்தனையோ நன்மைகளைச் செய்துவிட்டுப் போன கலைஞர், மற்றுமொரு நன்மையை எனக்கு செய்துவிட்டுப் போயிருக்கிறார். 'தம்பி.. நான் இல்லாத காலத்தில் உன் நூல்களை வெளியிட ஆளில்லையே என்று வருந்துவாய். ஆகையால் உன்னிடத்தில் என் மகனை விட்டுச் சொல்கிறேன். என் மகனை வைத்து என் இடத்தை நிரப்பப் பார்' என்று அவர் சொல்லாமல் சொன்னதாக நான் கருதி சற்றே ஆறுதல் அடைகிறேன்.

நான் எழுதிய நூல்களுள் என்னை அதிகமாக வேலை வாங்கிய நூல் தமிழாற்றுப்படை தான். சுமார் 4 ஆண்டுகள் ஆயின. அதிகமான ஊர்களில் அரங்கேற்றப்பட்ட நூலும் தமிழாற்றுப்படை தான். அதே போல் அதிகப்படியான எதிர்ப்புகளையும் சந்தித்தது தமிழாற்றுப்படையில் தான். அவை அனைத்தையும் அனுபவமாக எடுத்துக் கொள்கிறேன்.

என் மீது வசை வீசியவர்கள், பழி போட்டவர்கள், ஒடுக்கப் பார்த்தவர்கள், அடக்கப் பார்த்தவர்கள், எள்ளியவர்கள், குடும்பத்தைப் பழித்தவர்கள் என அனைவரையும் ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்கிறேன். அவர்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் மீது எந்தப் பழியுமில்லை. வருத்தம் இருக்கிறது என்பதை மறைக்க விரும்பவில்லை. ஆனால், பழிவாங்க விரும்பவில்லை. உண்மையை சில சாம்பல்கள் மூடியிருக்கலாம். காலம் அந்த சாம்பல்களை ஊதும் போது, உண்மையின் கனல், நீதியின் வெப்பம், நேர்மையின் சூடு சமூகத்தால் உணரப்படும். அந்தக் காலத்துக்காக காத்திருக்கிறேன்''.

இவ்வாறு வைரமுத்து பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x