Published : 09 Jul 2019 04:46 PM
Last Updated : 09 Jul 2019 04:46 PM

வாரிசு அரசியல் செய்வது யார்? - பேரவையில் அதிமுக- திமுக கடும் விவாதம்

அப்பா, மகன், பேரன் வாரிசு அரசியல் என சட்டப் பேரவையில் அதிமுக எம்எல்ஏ குற்றம் சாட்டினார். அதற்குப் பதிலளித்த திமுக கொறடா, ஓபிஎஸ், ஜெயக்குமார், ராஜன் செல்லப்பா மகன்கள் யார், அது வாரிசு அரசியல் இல்லையா என எதிர் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று விவாதத்தில் வாரிசு அரசியல் குறித்து அதிமுக உறுப்பினர் சோளிங்கர் ரவி பேசியதால் திமுக அதிமுகவினரிடையே வார்த்தை மோதலும் அவையில் கூச்சலும் நிலவியது.

சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினர் ரவி, ''மற்ற கட்சிகளைப் போல் தந்தை, மகன், பேரன் என வாரிசு அரசியலில் அதிமுக ஈடுபடவில்லை எனவும் சிறுபான்மையினரின் பாதுகாவலர் போல் காட்டிக்கொள்ளாமல், மாநிலங்களவைத் தேர்தலில் முஸ்லிம் ஒருவருக்கும், அருந்ததியர் ஒருவருக்கும் வாய்ப்பு வழங்கி உண்மையிலேயே அதைச் செயல்படுத்தி காட்டிய இயக்கம் அதிமுக'' என்றும் பேசினார்.

ரவி இவ்வாறு பேசியதும் திமுக உறுப்பினர்கள் அவையில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பின்னர் பேசிய திமுக கொறடா சக்கரபாணி, வாரிசு அரசியல் குறித்து அதிமுக உறுப்பினர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஆனால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவற்றை நீக்க முடியாது என்று கூறினார்.

பின்னர் தொடர்ந்து பேசிய சக்கரபாணி, அவையில் இல்லாதவர்கள் ( அப்போது ஸ்டாலின் அவையில் இல்லை) குறித்துப் பேசுவது மரபில்லை என்றும், வாரிசு அரசியல் என வரும் போது ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் ஆகியோரை சுட்டிக்காட்டி இவர்கள் எல்லாம் வாரிசுகள் இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், ஸ்டாலின் தன்னுடைய உழைப்பால் உயர்ந்து இன்று கட்சித் தலைவராகி இருப்பதாகவும், பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு முறையாக தான் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராகி இருப்பதாகவும், வெறுமனே தான்தோன்றித்தனமாக பதவிக்கு வரவில்லை என்றும் பதில் அளித்தார்.

தொடர்ந்து திமுகவினர் அதிமுக உறுப்பினர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தபடியே இருந்தனர்.

பின்னர் பேசிய அமைச்சர் தங்கமணி, ''அதிமுக உறுப்பினர் யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லாதபோது திமுக உறுப்பினர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஒருவேளை இன்று முரசொலியில் வாரிசுகள் குறித்து வந்த செய்தியை சுட்டிக்காட்டி கூட பேசியிருக்கலாம். அதற்கு ஏன் திமுக உறுப்பினர்கள் ஆக்ரோஷமாகிறார்கள்'' என கேள்வி எழுப்பினார்.

பின்னர் பேசிய சபாநாயகர், ''அதிமுக உறுப்பினர் யார் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை, நீங்களாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம்'' என விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x