

தமிழக மீனவர் பிரச்சினையில் மத்திய அரசை எங்கள் கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
தமிழக பாஜகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த பூந்தமல்லி குமணன்சாவடியிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான பாஜக நிர்வாகிகள் பூந்தமல்லி வந்திருந்தனர்.
இதற்காக கிண்டி கத்திபாராவிலி ருந்து குமணன் சாவடி வரை பாஜக பேனர்களும் கொடிகளும் வைக்கப் பட்டிருந்தன. காலை 10.30 மணியளவில் கூடிய பொதுக்குழு, தமிழிசை சவுந்த ரராஜனை ஒருமனதாக தலைவராக அங்கீகரித்தது.
இந்த பொதுக்குழுவில், மேக் இன் இந்தியா, தூய்மை இந்தியா, கங்கை புனரமைப்பு, ஜன் தன், உள்ளிட்ட திட்டங்களை அறிவித்ததற் காகவும், இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை மீட்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்காகவும், மத்திய அரசை பாராட்டி தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. மேலும் தமிழகத்தில், பூரண மதுவிலக்கு வேண்டும், பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு கூடாது, சுகாதார மேம்பாடு, தமிழக நதிகள் இணைப்பு உள்ளிட்டவை அடங்கிய தீர்மானங்களும் நிறை வேற்றப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் பேசியதாவது:
கோட்ட பொறுப்பாளராக நியமிக் கப்பட்ட நான் மாநில தலைவராக உயர்ந்திருக்கிறேன். கட்சிக்காக உழைத்தால் யார் வேண்டுமானாலும் தலைவராகலாம் என்பதையே இது காட்டுகிறது.
தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடம் பாஜகவுக்கான வெற்றி இடமாகும். தமிழக மீனவர்கள் பிரச்சினையில் அரசியல் கட்சிகள் மலிவான அரசியலில் ஈடுபடுகிறார்கள். எங்களுடன் உள்ள வைகோ கூட இதை செய்கிறார்.
நல்லாட்சி தரும் மத்திய அரசை விமர்சித்தால் ஏற்றுக் கொள்ளவோ, பொறுத்துக் கொள்ள முடியாது. 2014 ல் செங்கோட்டையை பிடித்தது போல் 2016-ல் புனித ஜார்ஜ் கோட்டையை பிடிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து பாஜக செயற்குழு கூட்டமும், மாவட்ட தலைவர்களுக்கான உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாமும் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சரும் பாஜக மேலிட பார்வையாளருமான ராஜிவ் பிரதாப் ரூடி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஜக எம்.பி தருண் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.