Published : 10 Jul 2019 10:56 AM
Last Updated : 10 Jul 2019 10:56 AM

சிவம்பட்டி கிராமத்தில் சிதைந்த நிலையில் பழங்கால ஓவியங்கள்: அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தகவல்

சிவம்பட்டி கிராமத்தில் உள்ள மாந்தோப் பில் நடுகற்களால் அமைக்கப்பட்டுள்ள வீடு போன்ற வடிவமைப்பில், வரையப் பட்டுள்ள பழங்கால ஒவியங்களை கிருஷ்ணகிரி அரசு அருங்காடசியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமை யிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பள்ளத்தூர் நடுநிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் வரலாற்று களப் பயணம் மேற்கொண்ட னர். அப்போது, மத்தூரை அடுத்த சிவம்பட்டியில் உள்ள மாந்தோப்பில் வீடு போன்ற அமைப்பில் நடுகற்கள் உள்ளதையும், அதனுள்ளே சிதைந்த நிலையில் பழங்கால ஓவியங்கள் உள்ளதையும் கண்டனர். இவற்றை படம் எடுத்து காப்பாட்சியருக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் மாந்தோப்பில் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக காப்பாட்சியர் கூறியதாவது:

700 ஆண்டுகளுக்கு முற்பட்ட 3 நடுகற்களை ஒரு காலகட்டத்தில், வீடு போன்று கற்களால் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் நட்டு வைத்து வழிபட்டு வந்துள்ளார்கள். இந்த நடுகற்கள் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவை. கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள அந்த வீடு, வழக்கம் போல் இல்லாமல் 4 பக்கமும் மூடப்பட்டு கிழக்கு பக்கம் மட்டும் இரண்டு அடி வாசல் கற்திட்டை போல் வைத்துள்ளனர். கிழக்கு பக்கமுள்ள கற்களைத்தவிர மற்ற மூன்று பக்கங்களும் காரை பூசப்பட்டுள்ளது. அதன்மேல் சுண்ணாம்பு பூசப்பட்டு செஞ்சாந்து வண்ணத்தில் அழகாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை பழங்கால ஓவியங்களாகும். இவை, சில நூறு ஆண்டுகளாக இயற்கையின் பிடியில் சிக்கி அழிந்து விட்டன. மீதமுள்ள ஓவியங்கள் அக்கால கலாச்சாரத்தை நமக்கு எடுத்துச் சொல்லும் ஒரு ஆவணமாக காட்சியளிக்கின்றன.

நடுகற்களுக்குப் பக்கவாட்டில் சுவர் போன்று அமைந்துள்ள கற்பலகைகளில்தான் அரிய சுவரோவியங்கள் வரையப்பட்டுள் ளன. 2 மீட்டர் நீளமும் 1 மீட்டர் அகலமும் உள்ள இந்த ஓவியத்தில் மூன்று குதிரைகளும் இரண்டு திருவிழாக்குடைகளும், பின்னலிட்ட சடையுள்ள பெண்ணின் உருவமும் வரையப்பட்டுள்ளது.

கற்பலகைகளில் சாந்து பூசி அதன் மேல் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அய்யனாரின் குதிரை போன்று அழகுறத் தீட்டப்பட்டுள்ளது. பெண் ஒருத்தியின் முகம் பின்னலிடப்பட்ட சடையுடன் தீட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களுக்கு மேலே தோரணம் போல திரைச் சீலை நீளமாக வரையப்பட்டுள்ளது. தென்பகுதி யில் பூக்கள் வரையப்பட்டுள்ளன. இந்நடுகற்கள் வைக்கப்பட்ட காலத்தில் அச்சிலைகள் மேலும் சாந்து பூசப்பட்டு வண்ணத்தால் வரையப்பட்டிருந்ததற்கான அடையாளங்களும் உள்ளன. காஞ்சி கைலாசநாதர் கோயிலுள்ள சிலைகளின் மீது வரையப்பட்டுள்ளதைப் போன்று உள்ளது. இவற்றை பாதுகாக்க பாலிவினைல் அசிடேட் கலவை பூசப்பட வேண்டும். மழைநீர் கசிந்து வண்ணப்பூச்சுகள் உதிர ஆரம்பித்துள்ளன. இவற்றை பாதுகாக்க கிராம மக்களிடம் அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு காப்பாட்சியர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x