மயங்க வைக்கும் மருத்துவம்!- முக்கியத்துவம் பெறும் `ரீஜினல் அனஸ்தீசியா’

மயங்க வைக்கும் மருத்துவம்!- முக்கியத்துவம் பெறும் `ரீஜினல் அனஸ்தீசியா’
Updated on
2 min read

நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வரும் துறைகளுள் மருத்துவத் துறையும் ஒன்று. தன்னலமற்ற அறிவியலாளர்களும்,  மருத்துவர்களும் உழைத்து, நோய் தீர்க்கும் மருந்துகளையும், தொழில்நுட்பங்களையும் கண்டுபிடிக்கிறார்கள். மருத்துவ சிகிச்சை குறித்த விழிப்புணர்வும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மருத்துவத் துறையில் முக்கியப் பங்கு வகிப்பது மயக்கவியல் துறை. அறுவைசிகிச்சை, வலி நீக்கு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளில் மயக்கவியல் முக்கியப் பங்காற்றுகிறது.

ரீஜினல் அனஸ்தீசியா என்றால் என்ன?

மயக்கவியல் துறையின் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது ரீஜினல் அனஸ்தீசியா. அதென்ன ரீஜினல் அனஸ்தீசியா? கங்கா மருத்துவமனையின் தலைமை மயக்கவியல் நிபுணர் ஜெ.பாலவெங்கடசுப்ரமணியனிடம்  இதுகுறித்து கேட்டோம்.

“அறுவைசிகிச்சையின்போது மயக்க மருந்து செலுத்தினால் நோயாளி மணிக்கணக்கில் மயக்கத்தில் இருப்பார்.

உடலின் ஏதோ ஒரு பாகத்துக்குச் செய்ய வேண்டிய அறுவைசிகிச்சைக்காக, மொத்த உடலுக்கும் மயக்க மருந்து செலுத்தி, நோயாளியை மயக்க நிலையில் வைப்பதுபோன்ற வழக்கங்கள் வழக்கொழிந்துப் போய்விட்டன” என்கிற மருத்துவர் பாலா, ‘ஆசியா ஒசியானிக் சொசைட்டி ஆஃப்

ரிஜினல் அனஸ்தீசியா’ என்ற  அமைப்பின் தலைவராக உள்ளார். மயக்கவியல் துறையின் நவீன முன்னேற்றம் குறித்தும், ரீஜினல் அனஸ்தீசியா குறித்தும் பல தகவல்களைக் கூறுகிறார்.

“மயக்கவியல் துறையில் முக்கியமானது ரிஜினல் அனஸ்தீசியா. அல்ட்ரா ஸ்கேன் கருவி வழியாக உடலின் எந்தப் பகுதியில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டுமோ, அங்கே நரம்பைக் கண்டறிந்து மருத்தை செலுத்தி, வலி இல்லாமல் அறுவைசிகிச்சை செய்யலாம். இதுதான் ரிஜினல் அனஸ்தீசியா.

உதாரணமாக, கை மணிக்கட்டு அடிபட்டு, அதற்காக அறுவைசிகிச்சை செய்ய வேண்டுமெனில், அந்தப் பகுதியில் மட்டும் அல்ட்ரா ஸ்கேன் வழியாக நரம்பைக் கண்டறிந்து, மயக்க மருந்து செலுத்தி மரத்துப் போகச் செய்யலாம். இந்த முறையால் முழு உடலும் மயக்கத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. மருந்து செலுத்தும்போது மூளைக்கான அலைக்கற்றைகள், மானிட்டர் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

நடைமுறை பலன்கள்...

வளர்ந்த நாடுகளில் மட்டுமே இருந்த இந்த வசதி, தற்போது இந்தியாவிலும் அறிமுகமாகியுள்ளது. விபத்து அறுவைசிகிச்சை, பிரசவத்தின்போது வலியில்லாமல் இருப்பது, நோய்களால் ஏற்படும் வலிகள் ஆகியவற்றில்  ரிஜினல் அனஸ்தீசியா முக்கியப் பங்காற்றுகிறது. குறிப்பாக, புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பவர்களுக்கு வலி அதிகமாக இருக்கும். அவர்களுக்கு கைகளில் இருந்து, தண்டுவடத்தின் வழியாக மூளைக்கு வலி செல்லும்.  தண்டுவடத்தில் மட்டும் மருந்தை  செலுத்திவிட்டால், மூளைக்கு செல்லும் வலி தடுக்கப்பட்டுவிடும். இதனால் வலியை உணர மாட்டோம்.

வயதானவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்ய, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை அளவுகள் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ரிஜினல் அனஸ்தீசியா இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்கிறது. வயதானவர்கள் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டால், காயம் இருக்கும் பகுதிக்கு மட்டும்  மருந்து கொடுத்தால் போதுமானது. இவ்வாறு ரிஜினல் அனஸ்தீசியா எல்லா வயதினருக்கும் உதவுகிறது.

பிரசவத்தின்போது முதுகு தண்டுவடத்தில் மருந்து செலுத்தி, வலியில்லாமல் சுகப் பிரசவத்தில் குழந்தையைப் பெற முடியும். ஆனால்,  இந்த மருந்து எடுத்துக் கொண்டால், பின்னாளில் முதுகு வலி வருமோ என்று தவறானப்புரிதல் உள்ளது. கர்ப்ப காலத்தில்  உடற்பயிற்சி செய்யும் பழக்கம் பெண்களிடம் குறைவு. அதுவே, பிரசவத்துக்குப் பின் முதுகுவலிக்கான காரணங்கள். ரிஜினல் அனஸ்தீசியா முறையில் பக்க விளைவுகள் எதுவும் கிடையாது.

எனவே, ரிஜினல் அனஸ்தீசியா குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம். நிறைய மருத்துவர்களுக்கே இதுகுறித்த பயிற்சியும், விழிப்புணர்வும் தேவைப்படுகிறது” என்றார்.

தேசிய கருத்தரங்கம் இன்று தொடக்கம்!

தேசிய அளவில் 9-வது மயக்கவியல் நிபுணர்கள் கருத்தரங்கம் கோவை லீமெரிடியன் ஹோட்டலில் இன்று (ஜூலை 5) தொடங்குகிறது. இதில், இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மயக்கவியல் மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.

ரிஜினல் அனஸ்தீசியா குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்படுவதுடன், அதை பயன்படுத்தும் முறைகள் விளக்கப்பட்டு, மாதிரி நோயாளிகள் வழியாக பயிற்சிகள் வழங்கப்படுகின்றன” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in