‘தி இந்து செய்தி எதிரொலி: தனியார் பள்ளி வெள்ளி விழா ஆளுநரின் கடலூர் வருகை ரத்து

‘தி இந்து செய்தி எதிரொலி: தனியார் பள்ளி வெள்ளி விழா ஆளுநரின் கடலூர் வருகை ரத்து
Updated on
1 min read

கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தனது வருகையை ரத்து செய்தார். அங்கீகாரம் இல்லாத பள்ளியில் நடைபெறும் வெள்ளி விழா நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்கலாமா என ‘தி இந்து' நாளிதழில் வியாழக்கிழமை செய்தி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் தனது வருகையை ரத்து செய்துள்ளார்..

கடலூர் மாவட்டத்தில் உள்ள 112 தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 22 பள்ளிகளுக்கு 2011-ம் ஆண்டு முதல் அரசின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அவ்வாறு அங்கீகாரத்தை இழந்த பள்ளிகளில் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள மெட்ரிக் பள்ளியும் ஒன்று.

இந்த பள்ளியின் வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநர் வருகை தரவிருப்பது சரியான செயலாகாது எனவும், இதுவே பல்வேறு தவறான முன்னுதாரணங்களுக்கு வழிவகுத்துவிடும் எனவும் மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நலச்சங்கத் தலைவர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக ‘தி இந்து' நாளிதழில் செய்தி வெளியானது.

இதை தொடர்ந்து ஆளுநர் மாளிகையிலிருந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு வெள்ளிவிழா கொண்டாடும் பள்ளியின் தற் போதைய நிலை குறித்து அறிக்கை கோரப்பட்டது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட பள்ளியின் நிலை குறித்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகத்தை கேட்ட றிந்தது. இதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைத்தது.

இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.சேகர் தலைமையிலான குழு நேற்று மாலை மாவட்ட ஆட்சியரை சந்தித்து அங்கீகாரம் இழந்த பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தது. மேலும் அங்கீகாரம் இழந்த பள்ளியில் நடைபெறும் விழாவுக்கு வருகை தரவுள்ள ஆளுநரைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர், அங்கீகாரம் இழந்த பள்ளிகள் தொடர்பான விரிவான அறிக்கையை ஆளுநர் மாளி கைக்கு அனுப்பிவைத்துள்ள தாகவும், அதன் அடிப்படையில் ஆளுநர் கடலூர் வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே சர்ச்சைக்குரிய பள்ளி தொடர்பாக முன்கூட்டியே தகவல் அளிக்காத மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் ஆகியோரை அழைத்து ஆட்சியர் கண்டித்தார். மேலும் அங்கீகாரம் இழந்த பள்ளிகள் மீது இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in