Published : 13 Jul 2019 03:32 PM
Last Updated : 13 Jul 2019 03:32 PM

கடம்பூர் பழங்குடியினர் பகுதியில் காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் உயிரிழப்பு: டிப்தீரியா நோய் என சந்தேகம்

கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மல்லியம்மன் துர்கம் என்ற இடத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு டிப்தீரியா நோயால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சனிக்கிழமை காலை சென்னைக்கு மருத்துவமனைக்கு அழைத்துவரும் வழியில் சிறுவன் உயிரிழந்தான்.

 

4ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவன் பெயர் காசி பிரசாந்த். பஞ்சாயத் யூனியன் நடுநிலைப்பள்ளியில் படித்து வந்தான். காசி பிரசாந்த்துக்கு தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஒருவார காலமாக இருந்து வந்தது. பிறகு விழுங்குவதிலும் கடினப்பாடு இருந்ததாக தெரிகிறது. இதோடு கழுத்தும் வீங்கத் தொடங்கியது. இதனையடுத்து ஆரம்ப சுகாதார மையத்துக்கு சிறுவன் அழைத்து வரப்பட்டான், பிறகு சத்யமங்கலம் தாலுக்கா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான். பிறகு கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு பிறகு அங்கிருந்து ஆலோசனையின் பேரில் சென்னையில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் வழியில் இறந்து போயுள்ளான்.

 

காசி பிரசாந்த்தின் சக மாணவி இதே நோய் அறிகுறிகளுடன் கோவை தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

வெள்ளிக்கிழமையன்று சுகாதாரத் துறையின் மருத்துவக் குழு இந்த பழங்குடியினர் பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்தி தடுப்பூசிகள் போட்டுள்ளனர். சுமார் 23 குழந்தைகளுக்கு நோய் தடுப்பூசிகள் போடப்பட்டன. பிறருக்கும் சோதனைகள் நடந்தன. சனிக்கிழமையன்று கடம்பூர்  மற்றும் குத்தியாலத்துர் பகுதிகளிலும் மருத்துவ முகாம் நடத்தினர்.

 

மருத்துவச் சேவை உதவி இயக்குநர் சவுந்தம்மாள் தி இந்து ( ஆங்கிலம்) நாளிதழுக்காகக் கூறும்போது, இந்த நோய் (டிப்தீரியா) 30 ஆண்டுகளுக்கு முன்பு இயல்பாக வருவதுதான், இது மூச்சுக்காற்று வழியாக பிறருக்கும் பரவக்கூடிய தொற்றாகும், இது தொண்டை, மேல் மூச்சுப்பாதை, ஆகியவற்றில் தொற்றி நச்சு ஒன்றை உற்பத்தி செய்து அது மற்ற உறுப்புகளையும் பாதிப்படையச் செய்யக் கூடியதாகும்., என்றார்.

 

இந்தத் தொற்றுக்குக் காரணம் கார்னிபாக்டீரியம் டிப்தீரியே (Cornyebacterium diphtheriae) ஆகும்.  இந்தத் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கவில்லை எனில் இது தீவிரமடைந்து உயிர்க்கொல்லியாக மாறும். ஆகவே மருத்துவக் குழு இதே மலைப்பகுதியில் அடுத்த 10 நாட்களுக்கு முகாமிட்டு தொண்டை வலி, காய்ச்சல் போன்ற நோய் அறிகுறி உள்ளவர்களை ஸ்க்ரீன் செய்து அருகில் உள்ள மருத்துவ மையங்களுக்கு அனுப்பவுள்ளோம் என்றார் அவர்.

 

அதிகாரிகள் இது பற்றி கூறும்போது, இப்பகுதியில் முதன் முதலாக டிப்தீரியாவினால் சாவு ஏற்பட்டுள்ளது. வாக்சைன்கள், தடுப்பூசிகள் ஆகியவை சிறப்பான முறையில் செய்யப்பட்டு வந்துள்ளதால் சமீபகாலங்களில் டிப்தீரியா மரணம் இப்பகுதியில் ஏற்படவில்லை, இந்நிலையில் மரணமடைந்த சிறுவனின் பயண வரலாறு, அவருக்கு தடுப்பூசி போடப்பட்டதா அவரது உடல் நோய் தடுப்புசக்தி அளவு மற்றும் பிற காரணிகளை ஆய்வு செய்யவுள்ளோம். சிறுவனின் உடல் சனிக்கிழமை மாலை ஊருக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x