கருணாநிதியின் ஆணைக்கு முன் பதவி தூசு என்றவர் ஆற்காடு வீராசாமி: துரைமுருகன் புகழாரம்

கருணாநிதியின் ஆணைக்கு முன் பதவி தூசு என்றவர் ஆற்காடு வீராசாமி: துரைமுருகன் புகழாரம்
Updated on
1 min read

கருணாநிதியின் ஆணைக்கு முன் பதவி தூசு என்றவர் ஆற்காடு வீராசாமி என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வடசென்னை தொகுதி எம்.பி.யும் திமுக மருத்துவர் அணி நிர்வாகியுமான கலாநிதி வீராசாமியின் இல்லத் திருமண விழா சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. இதில் துரைமுருகன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ''ஆற்காடு வீராசாமி இல்லத் திருமண விழாவில் எந்தத் திருமணம் நடந்தாலும் நான்தான் ஆஸ்தான வரவேற்பாளர். வீராசாமியின் தியாகம் ஒப்புயர்வுற்றது. கருணாநிதியின் முடிவுதான் இறுதியானது என்று சொன்னவர் வீராசாமி.

ஒருமுறை வேலூர் மத்திய வங்கியின் தலைவராக வீராசாமி வரவேண்டுமென்று நாங்கள் வேலை செய்தோம். வேலூர் சர்க்யூட் ஹவுஸில் எல்லா இயக்குநர்களும் அதையே விரும்பினர். ஆனால் நிர்வாகி ஒருவர் வேலூர் வந்து, எங்களிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அதில், 'வேலூர் மத்திய வங்கித் தலைவராக முல்லை வேலை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்' என்று தலைவர் கருணாநிதி எழுதி கையெழுத்து போட்டிருந்தார். எல்லோருக்கும் அதிர்ச்சி.

நான்கூட வீராசாமியிடம், ஜெயித்துவிட்டுப் போய் தலைவர் காலில் விழுந்துவிடலாம் என்று கூறினேன். எப்பொழுது தலைவர் ஒரு உத்தரவு போட்டாரோ, அது இந்தப் பதவி அல்ல, எந்த இந்திரப் பதவி என்றாலும் அது என் கால் தூசுக்குச் சமம். கருணாநிதியின் ஆணைதான் எனக்கு முக்கியம் என்று சொன்னவர் வீராசாமி.

திமுக இருக்கும்வரை வீராசாமிக்கு தனித்த அடையாளம் இருக்கும்'' என்றார் துரைமுருகன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in