பிக் பாஸ் வீட்டுக்குள் வனிதா விஜயகுமாரிடம் போலீஸ் விசாரணை: குழந்தையை ஆஜர்படுத்துகின்றனர்

பிக் பாஸ் வீட்டுக்குள்  வனிதா விஜயகுமாரிடம் போலீஸ் விசாரணை: குழந்தையை ஆஜர்படுத்துகின்றனர்
Updated on
2 min read

குழந்தை கடத்தல் வழக்கில் வனிதா விஜயகுமாரைத் தேடி சென்னை வந்த தெலங்கானா போலீஸ் பிக் பாஸ் வீட்டில் அவரிடம் விசாரணை நடத்தியது. மாலை அவர் குழந்தையிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான வனிதா விஜ்யகுமார் தனது இரண்டாம் கணவரிடம் கடந்த 2012-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். விவாகரத்து கொடுக்கப்பட்டபோது உயர் நீதிமன்றம் அவரது பெண் குழந்தையைத் தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதற்கு ஒப்புக்கொண்டு விவாகரத்து கொடுத்தார் வனிதா.

குழந்தையுடன் தனது சொந்த ஊரான தெலங்கானா மாநில சைபராபாத்தில் வசிக்கிறார் கணவர் ஆனந்தராஜ். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் குழந்தையைக் காணவில்லை. வனிதா விஜயகுமார் குழந்தையை அழைத்துச் சென்றுவிட்டார். இதையடுத்து தனது குழந்தையைக் கடத்தியதாக வனிதா விஜயகுமார் மீது சைபராபாத் காவல் நிலையத்தில் ஆனந்தராஜ் புகார் அளித்தார்.

குழந்தையைத் தேடி சென்னை வந்த ஆனந்தராஜ் சென்னை போலீஸாரிடமும் வனிதா விஜயகுமார் மீது புகார் அளித்தார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் தனது குழந்தையுடன் தோன்றுவதைப் பார்த்து ஆனந்தராஜ் மீண்டும் சைபராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, ஆட்கடத்தல் பிரிவின் கீழ் (ஐபிசி 363) வனிதா மீது வழக்குப் பதிவு செய்து தெலங்கானா போலீஸார் சென்னை வந்தனர்.

சென்னை காவல்துறை உதவியுடன் பூந்தமல்லியில் உள்ள பிக் பாஸ் வீட்டிற்கு இன்று காலை சென்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதா விஜயகுமாரிடம் 2 மணி நேரத்திற்கு மேல் போலீஸார் விசாரணை நடத்தினர்.  

குழந்தையை ஆஜர்படுத்த தெலங்கானா போலீஸார் கேட்டுக்கொண்டதை அடுத்து, இன்று மாலை 5 மணிக்கு குழந்தையை அழைத்து வர வனிதா விஜயகுமார் ஒப்புக்கொண்டார்.

நடந்த சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையப் பெண் நிர்வாகி முன்பு குழந்தையிடம் ஒப்புதல் வாங்க உள்ளதாக கணவர் ஆனந்தராஜ் தெரிவித்தார்.

குழந்தையிடம் வாக்குமூலம் பெற்றபின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in