Published : 05 Jul 2019 12:42 PM
Last Updated : 05 Jul 2019 12:42 PM

எம்.பி. ஆவாரா வைகோ? சட்டம் என்ன சொல்கிறது?

தேசத் துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் பெற்ற வைகோ ராஜ்யசபா உறுப்பினராக வர வாய்ப்புள்ளதா? சட்டம் என்ன சொல்கிறது? என்பது குறித்து ஓர் அலசல்.

திமுகவுடன் ஏற்பட்ட தேர்தல் உடன்பாட்டில் மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டது. அதில் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால்,  அவருக்கு எதிரான தேசத் துரோக வழக்கின் தீர்ப்பு அவருக்குச் சிக்கலாக இருக்கும் என கூறப்பட்டது.

இன்று தேசத் துரோக வழக்கில். சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

பிரிவு 124(எ)-ன் கீழ் ஓராண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். இதையடுத்து வைகோ ஜாமீன் கோரினார்.

ஜாமீன் கிடைக்க வசதியாக வழக்கின் தீர்ப்பு ஒரு மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

வழக்கின் தீர்ப்பு வைகோவிற்கு தகுதியிழப்பா அல்லது பிரச்சினை எதுவும் இல்லையா என்பது குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டன.

இது குறித்து மூத்த வழக்கறிஞர் ரமேஷ் நடராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

''வழக்கில் வைகோ மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் எந்த பிரிவின்கீழ் தண்டிக்கப்பட்டுள்ளார் என்பதைப் பொறுத்து இது பற்றி கருத்து தெரிவிக்க முடியும்.

வைகோ ஐபிசி 153(a) பிரிவின் கீழ் தண்டிக்கப்படவில்லை. இந்தப் பிரிவு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8(1) -ன் கீழ் வருகிறது இதன் கீழ்  குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டாலே அவர் தகுதி இழப்புக்கு உள்ளாவார். ஆனால், வைகோ இந்தப் பிரிவின் கீழ் தண்டிக்கப்படவில்லை. ஏற்கெனவே அதிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுவிட்டார்.

தற்போது தண்டிக்கப்பட்டுள்ள பிரிவு ஐபிசி 124(a).இது மக்கள் பிரநிதித்துவச் சட்டம்  8(3)-ன் கீழ் வருகிறது இதில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8(3)-ன் கீழ் ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால் அவர் தகுதி இழப்புக்கு உள்ளாவார்.

வைகோ ஓராண்டு மட்டுமே சிறை தண்டனை பெற்றுள்ளதால் அவர் தகுதி இழப்பின் கீழ் வரமாட்டார். ஆகவே அவர் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்பதில் எவ்வித சிக்கலும் இல்லை''.

இவ்வாறு மூத்த வழக்கறிஞர் ரமேஷ் நடராஜன் தெரிவித்தார்.

இதன்மூலம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாநிலங்களவை உறுப்பினராகத்  தேர்வு செய்யப்படுவதில் எவ்வித சிக்கலும், தடையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x