Last Updated : 02 Jul, 2019 08:31 PM

 

Published : 02 Jul 2019 08:31 PM
Last Updated : 02 Jul 2019 08:31 PM

நிர்வாகக் குளறுபடி, மோதல் எதிரொலி: மதுரை வக்பு வாரிய கல்லூரி நிர்வாகம்  கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் ஒப்படைப்பு

மதுரை வக்பு வாரியக் கல்லூரி நிர்வாகத்துக்குள் ஏற்பட்ட மோதல், குளறுபடியால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மதுரை கே.கே.நகரில் வக்பு வாரிய நிர்வாகத்துக்கு சொந்தமான கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்படுகிறது. தற்போது, இக்கல்லூரியின் செயலரான ஜமால் மொய்தீன் தலைமையில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செயல்பட்டனர். இவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே கல்லூரியை நிர்வகிப்பது தொடர்பாக பிரச்னை, பல்வேறு மோதல் போக்கு தொடர்ந்தது.

இரு தரப்பிலும் மாறி, மாறி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வதும் நிகழ்ந்தது. இதற்கிடையில் கடந்த ஓராண்டுக்கு முன், இக்கல்லூரியில் புதிய உதவி பேராசிரியர்கள், ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக  மூவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவுபடி, சிபிஐ அதிகாரிகள் புதிதாக நியமனம் பெற்றவர்களிடம் விசாரித்தனர். இது போன்று தொடர்ந்து  இக்கல்லூரி சர்ச்சையில் சிக்கியது.

இந்நிலையில் கடந்த 4 மாதமாக இக்கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம்  வழங்க முடியாத சூழலும் உருவானது. இருதரப்பிலும் இருந்து கல்லூரிக் கல்வி இயக்குநர்,  இணை இயக்குநர்களுக்கு தொடர்ந்து புகார் கடிதங்கள் அனுப்பினர்.

இருப்பினும், பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எட்டவில்லை. நிர்வாகப் பிரச்சினையால் பேராசிரியர்கள், ஊழியர்கள் பாதிக்கப்படுவதோடு, மாணவர்களும் பாதிக்கும் நிலையும் ஏற்பட்டது. நிர்வாகத்தில் எழுந்த குளறுபடி காரணமாக பேராசிரியர்கள், ஊழியர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க,  கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் நிர்வாகத்தை ஒப்படைக்க இயக்குநர் ஜோதி வெங்கடேஷ்வரன் நடவடிக்கை எடுத்தார்.

இதற்கான ஆணையை நேற்று அவர் பிறப்பித்தார். இதன்படி, மதுரையிலுள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பாஸ்கரன் நிர்வாகத்தை இன்று முதல் ஏற்று கவனிக்க தொடங்கினார். ஏற்கனவே  முதல்வராக இருந்து பணி ஓய்வு பெற்ற அப்துல் காதீருக்கு பதிலாக கடந்த மாதம் புதிய முதல்வரை பழைய நிர்வாகம் நியமித்தது. ஆனாலும், தற்போது, இணை இயக்குநரிடம் ஒப்படைத்த பிறகு பணி மூப்பு அடிப்படையில் முகமது அலி ஜின்னா என்பவர் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, "இக்கல்லூரியின் நிர்வாகத்துக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் பெற முடியாத சூழல் இருந்தது. தற்காலிகமாக சுமார் 6 மாத காலத்திற்கு நிர்வாகம் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பேரா சிரியர்கள், ஊழியர்களுக்கான நிலுவை சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் தரப்பில் சமரசம் ஏற்படும் பட்சத்தில் திரும்ப ஒப்படைக்கப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x