

சென்னை தேனாம்பேட்டையில் தொழிலதிபர் வீட்டில் பிசியோதெரபி சிகிச்சை அளிக்க வந்த பெண் ரூ.7 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை திருடிச் சென்றார். அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலனியில் வசித்து வருபவர் டால்மியா. இவரது மனைவி ராதா. இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார்.
மருத்துவர் ஆலோசனையின் பேரில் தினமும் பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டார் ராதா. இதற்காக வடபழனியைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் சௌமியா என்பவரை தனக்காக பிசியோதெரபி செய்ய அமர்த்தினார்.
சௌமியா தினமும் ராதாவின் வீட்டிற்கே வந்து பிசியோதெரபி சிகிச்சை அளித்து வந்தார். நாளடைவில் ராதாவின் நம்பிக்கைக்கு உரியவராக மாறிவிட்டார் சௌமியா.
சௌமியா பியூட்டி பார்லரும் வைத்திருந்ததால் பிசியோதெரபியுடன் பியூட்டிஷனாகவும் அவர் செயல்பட்டு நெருக்கமாகியுள்ளார். இந்த நெருக்கத்தில் வீட்டில் எங்கும் போகலாம்,வரலாம் என்ற நிலைக்கு வந்த சௌமியா உரிமையுடன் வீட்டில் புழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் சௌமியா ஒருநாள் ராதா தன்னுடைய ரூ.7 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளைக் கழற்றி பீரோவில் வைப்பதைப் பார்த்துள்ளார். அதைத் திருட திட்டமிட்டு, ராதா அசந்திருந்த நேரம் பார்த்து அந்த வைர நகைகளை சௌமியா திருடிச் சென்றார்.
நகைகளைக் காணோம் என்று தேடிய ராதா இதுகுறித்து சௌமியாவை விசாரித்துள்ளார். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் சௌமியா மீது சந்தேகம் கொண்ட ராதா, நகை திருட்டுப் போனது குறித்து தேனாம்பேட்டை போலீஸில் புகார் அளித்துள்ளார்.
புகாரைப் பெற்ற போலீஸார் சௌமியாவைத் தேடினர். இதனால் அவர் தலைமறைவானார். இதையடுத்து அவரை போலீஸார் தேடிவந்தனர். சௌமியாவின் செல்போன் எண்ணை போலீஸார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த செளமியா வடபழனியில் உள்ள தன்வீட்டுக்கு வந்தார்.
செல்போன் சிக்னல் வடபழனியைக் காட்டியதும் உஷாரான தேனாம்பேட்டை போலீஸார் உடனடியாக அங்கு சென்று சௌமியாவைப் பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
விசாரணைக்குப் பின் சௌமியா சிறையில் அடைக்கப்பட்டார்.