Published : 06 Jul 2019 07:55 AM
Last Updated : 06 Jul 2019 07:55 AM

ஒரு பிரியாணிக்காக ரூ.40 ஆயிரத்து 76 செலவு; ஆன்லைனில் பணத்தை பறிகொடுத்த சென்னை மாணவி

செல்போன் செயலியில் பிரியாணிக்கு முன்பதிவு செய்து அதற்காக 40 ஆயிரத்து 76 ரூபாயை பறிகொடுத்துள்ளார் சென்னை மாணவி.

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் பிரியா அகர்வால். கல்லூரி மாணவியான இவர், தனது நண்பர்களுடன் 2 தினங்களுக்கு முன்னர் வடபழனி சென்றுள்ளார். அங்கிருந்தபடி செல்போன் செயலியில் தனக்கும், தனது நண்பர்களுக்கும் பிரியாணி முன்பதிவு செய்துள்ளார்.

சிறிது நேரத்தில் அவரது ஆர்டர் நிராகரிக்கப்பட்டதாக செல்போனுக்கு தகவல் வந்தது. ஆனால் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.76 பிடித்தம் செய்யப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா, சம்பந்தப்பட்ட செயலியின் சேவை மைய எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார்.

எதிர்முனையில் பேசியவர், மாணவி கூறிய விபரங்களைக் கேட்டுவிட்டு, 76 ரூபாய் சிறு தொகையாக இருப்பதால் ஆன்லைன் பரிவர்த்தனையில் திருப்பிசெலுத்த முடியாது எனக் கூறி ரூ.5 ஆயிரம் அனுப்பினால் மொத்தமாக சேர்த்து ரூ.5 ஆயிரத்து 76 திருப்பி செலுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

40 ஆயிரம் வசூல்

இதை நம்பிய மாணவி, ரூ.5 ஆயிரத்தை சேவை மைய நபர் சொன்ன வங்கிக் கணக்குக்கு ஆன்லைனில் அனுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து ரூ.5 ஆயிரத்து 76 திரும்பவரும் என்று எதிர்பார்த்த பிரியாவுக்கு மற்றொரு அதிர்ச்சி தகவல் வந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு சேவை மையத்திலிருந்து பேசிய மற்றொரு நபர், நீங்கள் அனுப்பிய தொகை எங்கள் வங்கி கணக்குக்கு வரவில்லை. மீண்டும் ரூ.5 ஆயிரத்தை செலுத்துமாறு கூறியுள்ளார். விரக்தி அடைந்த பிரியா, ரூ.5 ஆயிரத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் மீண்டும்  செலுத்தி உள்ளார். இப்படி 8 முறை ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் மாணவி செலுத்தியுள்ளார்.

ஆனால், அவருக்கு பணம் திரும்ப வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரியா, இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆன்லைன் மோசடி என்பதால் இந்தப் புகாரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கும்படி அவரிடம் போலீஸார் கூறியுள்ளனர்.

அதன்படி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரியா புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து,  வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்டமாக பிரியா பணம் செலுத்திய  வங்கிக் கணக்கு, வாடிக்கையாளர் சேவை மைய செல்போன் எண் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.

கவனமுடன் செயல்பட வேண்டும்

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, "தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைக்காக பல செயலிகள் உள்ளன. எனவே ஆன்லைன் பரிவர்த்தனை செய்பவர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை மையத் திலிருந்து பேசுவதைப் போல பேசும் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், டெபிட், கிரெடிட் கார்டுகளின் எண்கள், ரகசிய எண்கள் உள்ளிட்டவற்றை சாமர்த்தியமாகக் கேட்டறிந்து கைவரிசையைக் காட்டி விடுவார்கள். இந்த மோசடியில் ஈடுபட்டது வடமாநில கும்பலாக இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x