Published : 02 Jul 2019 05:19 PM
Last Updated : 02 Jul 2019 05:19 PM

ராகுல் காந்தி பேசாததை பேசியதாகக் கூறுவதா? ஆதாரத்தை வெளியிடுங்கள்: முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி சவால்

ராகுல் காந்தி பேசாததைப் பேசியதாக திரும்பத் திரும்பக் கூறுகிற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதற்கான ஆதாரத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மேகேதாட்டுவில் அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்று கர்நாடகத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ததாகவும், அதை எதிர்த்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஏன் எதிர்ப்புக் குரல் கொடுக்கவில்லை என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது இதே கருத்தை தேனி பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் கூறியபோது, அதை வன்மையாக மறுத்து 14.4.2019 அன்று கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தேன். இப்போது மீண்டும் அதே கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஒரு பொய்யை நூறுமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற நோக்கத்தில் கோயபல்சை மிஞ்சுகிற வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

இந்தப் பேச்சுக்கு என்ன ஆதாரம்? என்ன அடிப்படை ? எந்த ஊடகத்திலாவது ராகுல் காந்தி இப்படிப் பேசியதாக வெளிவந்திருக்கிறதா? தமிழக முதல்வரை சவால் விட்டுக் கேட்கிறேன், அதற்கான ஆதாரத்தை வெளியிட முடியுமா? பேசாத ஒன்றை பேசியதாகத் திரித்துக் கூறுவதால் உங்கள் பொறுப்பை தட்டிக்கழித்து விட முடியாது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு இருப்பதால் தமிழக காங்கிரஸ் கட்சியினர் தலையிட்டு காவிரியில் தண்ணீர் பெறுவதை விட்டுவிட்டு, அதிமுக அரசை குறை கூறலாமா? என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். காவிரி பிரச்சினை என்பது இரு மாநிலம் சம்பந்தப்பட்ட 50 ஆண்டுகால பிரச்சினை. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஐம்பதுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து, மத்திய அரசு தலையிட்டும் பிரச்சினை தீராமல் காவிரி மேலாண்மை வாரியம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் தமிழகத்துக்கு நியாயம் கிடைத்திருக்கிறது.

இப்பிரச்சினையில் கர்நாடகத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழகத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்துகிற எடப்பாடி பழனிசாமி, கர்நாடகாவில் உள்ள அதிமுக கிளை தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றுமா?

கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நலனுக்கு விரோதமாகத் தான் செயல்பட்டு வருகிறது. இதில் கட்சி எல்லைகளைக் கடந்து இப்பிரச்சினையைப் பார்க்க வேண்டுமே தவிர, பிரச்சினையை திசை திருப்புகிற முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபடக் கூடாது.

மேகேதாட்டு பிரச்சினையில் தமிழ்நாட்டு நலன்களை, உரிமைகளை மத்திய அரசிடம் தாரை வார்த்தது யார்? ரூபாய் 6 ஆயிரம் கோடி செலவில் மேகேதாட்டுவில் அணை கட்ட ஆய்வு நடத்தி, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய நீர்வள ஆணையம், கர்நாடக அரசுக்கு கடந்த 2018, நவம்பர் 26 அன்று அனுமதி அளித்தது.

காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் எந்த மாநில அரசும் மேற்கொள்ளக் கூடாது.

இந்நிலையில் திடீரென கர்நாடக அரசின் கோரிக்கையை மத்திய நீர்வள ஆணையம் எந்த அடிப்படையில் ஏற்றுக்கொண்டது ? இதுகுறித்து கருத்து கூறிய மத்திய நீர்வள ஆணையச் செயலாளர் காவிரியின் குறுக்கே அணை கட்டும் பரிந்துரையை காவிரி நீர்வள ஆணையம் பரிசீலிக்கக் கூடாது என்று எழுத்துப்பூர்வமாக எங்கே கூறப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற கருத்தாகும்.

இத்தகைய கருத்தை கூறுவதற்கு மத்திய பாஜக அரசின் ஒப்புதல் இல்லாமல் கூறியிருக்க முடியாது. இந்தக் கருத்து தமிழ்நாட்டின் உரிமைகளை அப்பட்டமாகப் பறிக்கிற செயலாகும். இதை எதிர்க்கத் துணிவற்ற எடப்பாடி பழனிசாமி அரசு பிரச்சினையை திசை திருப்புகிற வகையில் மலிவான அரசியலில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு கடந்த 15 மாதங்களாக தலைமைப் பொறுப்பில் எவரும் நியமிக்கப்படவில்லை. இதற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பாகும். காவிரி நீர்வளத்துறை செயலாளர் அருண்குமார் சின்ஹா தான் காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைமைப் பொறுப்பையும் கூடுதலாக வகித்து வருகிறார். இதனால் மத்திய பாஜக அரசு கர்நாடக மாநில பாஜகவின் நலனில் அக்கறை காட்டுகிற வகையில் மேகேதாட்டுவில் 67 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய அனுமதி அளித்திருக்கிறது.

தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் நலனில் கடுகு அளவாவது அதிமுக அரசுக்கு அக்கறை இருக்குமேயானால் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளித்த மத்திய பாஜக அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டுமே தவிர, பிரச்சினையை திசை திருப்புகிற வகையில் தனது கையாலாகாத தனத்தை மூடிமறைக்கும் நோக்கத்தோடு, திமுக - காங்கிரஸ் கட்சிகள் மீது பழிபோடுவதை முதல்வர் எடப்பாடி உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

எனவே, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் எள்ளின் முனையளவு கூட உண்மை இல்லாத வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசாததைப் பேசியதாக திரும்பத் திரும்பக் கூறுகிற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதற்கான ஆதாரத்தை உடனடியாக வெளியிட வேண்டும். அப்படி வெளியிட முடியவில்லையெனில் ஆதாரமற்ற அவதூறு கருத்தை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும்", என கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x