Published : 01 Jul 2019 02:49 PM
Last Updated : 01 Jul 2019 02:49 PM

சாதியை ஒழிக்க மத்திய அரசு ஏன் சட்டம் கொண்டு வர முன்வரவில்லை? - கி.வீரமணி கேள்வி

சாதியை ஒழிக்க மத்திய அரசு ஏன் சட்டம் கொண்டு வர முன்வரவில்லை என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே சிவில் சட்டம், ஒரே தேர்தல், ஒரே குடும்ப அட்டை  என்று அறிவிக்கும் பிரதமர் மோடி தலைமையில் உள்ள பாஜக அரசு சாதியை ஒழித்து, ஒரே மக்கள் - அனைவரும் சரிநிகர்  மக்கள் - அனைவரும் சரிசமம் என்று கருதி ஆயிரம் உண்டிங்கு சாதி என்பதை மாற்றி, சட்டம் கொண்டு வர ஏன் முன்வரவில்லை?

சாதி ஒழிக்கப்படுகிறது என்று சட்டத் திருத்தம் கொண்டு வரத் தயாரா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆவது பிரிவில், 'தீண்டாமை ஒழிக்கப்படுகிறது' என்பதற்குப் பதிலாக, "சாதி ஒழிக்கப்படுகிறது; அதை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தலும் குற்றம்" என்று அறிவித்து, ஏன் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை நிலைநாட்ட முன்வரவில்லை? இதற்கு யார் தடை? என்பது நமது முக்கியமான கேள்வி.

இந்து மதம் எனும் பெயர்கூட அந்நியன் தந்தது என்று காஞ்சி சங்கராச்சாரியார் போன்றவர்களே கூறியுள்ள நிலையில், அந்த பெரும்பான்மை என்று கூறி, மதவெறியினை ஒன்றிணைக்க முயலும் முன்னர் சாதியை ஒழிக்க முன்வரவேண்டாமா? இந்து மக்களே ஒன்று சேருங்கள் என்று குரல் கொடுக்கும் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இதற்காக முந்திக்கொண்டு போராட முன்வர வேண்டும்? இல்லையா?

வெறும் தீண்டாமை ஒழித்து சகோதரத்துவம் கொண்டு வந்துவிட்டோம் என்று வெகுநேர்த்தியாக திசை திருப்பக் கூடாது.

சாதியை ஒழிக்காமல் சமத்துவம் மலருமா?

தீண்டாமையின் ஊற்றும், உயிர் நிலையும் சாதி. அதை ஒழிக்காமல், சமத்துவமோ, சகோதரத்துவமோ, சுதந்திரமோ, சுகானுபவமோ ஒருக்காலும் ஏற்படாது!.

இதைத்தான் திராவிடர் கழகமும், அதன் ஒப்பற்ற தலைவர் பெரியாரும் அன்று முதல் இன்றுவரை கேட்டுப் போராடும் களத்தில் உள்ளனர்", என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x