Published : 01 Apr 2014 11:13 AM
Last Updated : 01 Apr 2014 11:13 AM

மோடியின் போலி பிம்பங்கள்: ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

போலி விளம்பரங்கள் மூலமே குஜராத் வளர்ச்சி பெற்றதாக தம்பட்டம் அடிக்கிறார் மோடி. அவருடைய போலி பிம்பத்தை உழைப்பாளி மக்களின் வீடுகளுக்குச் சென்று அம்பலப்படுத்துங்கள் என்று கட்சி ஊழியர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

கோவை வரதராஜபுரத்தில் செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியது:

நாட்டை சீரழித்த காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு தீராத வெறுப்பு உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் சரிந்துள்ள காங்கிரசின் செல்வாக்கை சாதகமாக்கிக்கொள்ள பாஜக முயற்சிக்கிறது. ஆர்எஸ்எஸ் ஆலோசனைப்படி மோடியை பாஜக முன்னிறுத்துகிறது. மோடியை பிரபலப்படுத்த பலஆயிரம் கோடி விளம்பரத்துக்காக செலவு செய்கின்றனர்.

இந்தியாவிலேயே குஜராத் அபார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், அதன் கதாநாயகன் மோடி என்பது போன்று ஒரு போலி பிம்பத்தை உருவாக்கி கருத்தை திணிக்கிறது.

இந்தியாவில் வளர்ச்சி பெற்ற 17 மாநிலங்களில் 10 ஆவது இடத்தில் குஜராத் இருக்கிறது. ஆமதாபாத்தில் இன்னமும் மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளும் கொடுமை உள்ளது. கல்வியில், சுகாதாரத்தில், வேலைவாய்ப்பில் என அனைத்திலும் குஜராத் பின்தங்கியே உள்ளது. ஆனால் பெருமுதலாளிகளுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குஜராத் மாநில அப்பாவி விவசாயிகளிடமிருந்து பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி கைப்பற்றியுள்ளனர்.

அப்பாவி விவசாயிகள் சொந்த நிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். குஜராத்தில் வாழும் நகர, கிராமப்புற தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கூலி இந்தியாவின் சராசரி கூலியைவிட மிகவும் குறைவு. கல்வி, வேலை, பொருளாதாரம், சுகாதாரத்தில் வளர்ச்சியை நிரூபிக்க வேண்டும். ஆனால், இதில் அனைத்திலும் குஜராத் பின்தங்கி உள்ளது. விளம்பரங்கள் மூலம் மோடி அலைவீசுவதாக திட்டமிட்டு செய்யப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x